Published : 04 Nov 2019 08:33 AM
Last Updated : 04 Nov 2019 08:33 AM

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஓய்வு பெற இருப்பதால் அயோத்தி வழக்கில் 13-ம் தேதி தீர்ப்பு வெளியாக வாய்ப்பு: பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன் பாக அயோத்தி வழக்கில் வரும் 13-ம் தேதி இறுதித் தீர்ப்பு வெளி யாக வாய்ப்புள்ளது என்று உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.

இதன் காரணமாக உத்தர பிரதேசம் மட்டுமன்றி அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக் குரிய நிலத்தை இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் உரிமை கோரி வருகின்றன. இந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன் றம் விசாரித்தது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கடந்த 2010 செப்டம்பர் 30-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சமரச முயற்சி தோல்வி

இவ்வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த மார்ச் 8-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அயோத்தி ராமஜென்ம பூமி- பாபர் மசூதி நில விவகாரத்தில் சுமுக தீர்வு காண 3 பேர் கொண்ட சமரசக் குழுவை அரசியல் சாசன அமர்வு நியமித்தது.

இந்த குழுவில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் தலை வர்  ரவிசங்கர், மூத்த வழக்கறி ஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம் பெற்றனர். இந்த குழுவின் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

நாள்தோறும் விசாரணை

இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் அயோத்தி வழக்கில் நாள்தோறும் விசாரணை நடத்தப்பட்டது. நாற்பது நாட்கள் நடைபெற்ற விசாரணையில் இருதரப்பு வாதங்கள் கடந்த 16-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

இதனிடையே, 3 பேர் அடங்கிய சமரசக் குழு கடந்த மாதம் 16-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ரகசிய அறிக்கையை தாக்கல் செய்தது. அதன்படி சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி நிலத்தை அரசே கையகப்படுத்திக் கொள்ள சன்னி வக்பு வாரியம் சம்மதித்துள்ள தாகக் கூறப்படுகிறது. இதனை இதர முஸ்லிம் அமைப்புகள் மறுத்தன.

13-ம் தேதி தீர்ப்பு?

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இன்று முதல் வரும் 8-ம் தேதி வெள்ளிக்கிழமை வரை உச்ச நீதிமன்றத்தின் அலுவல் நாட்கள் முழுமையாக நடைபெற உள்ளது. அதன்பின் 9-ம் தேதி சனி, 10-ம் தேதி ஞாயிறு விடுமுறை நாட்களாகும். குருநானக் பிறந்த நாளையொட்டி வரும் 11, 12-ம் தேதியும் உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்பின் வரும் 13-ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங் கப்படலாம். ஒருவேளை அன்றைய தினம் தவறினால் 14, 15-ம் தேதி களில் கண்டிப்பாக தீர்ப்பு அறிவிக் கப்படும் என்று உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தலைமை நீதிபதி உட்பட ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்குவார்களா அல்லது மாறு பட்ட தீர்ப்பை கூறுவார்களா என் பது கேள்விக்குறியாக உள்ளது.

அயோத்தியில் 144 தடை

அயோத்தி வழக்கு தீர்ப்பை யொட்டி உத்தர பிரதேசத்தின் அயோத்தி, வாரணாசி, மதுரா நகரங்களில் தீவிரவாதிகள் தாக்கு தல் நடத்தக்கூடும் என்று உளவுத் துறை எச்சரித்திருப்பதால் அந்த நகரங்களில் பாதுகாப்பு அதிக ரிக்கப்பட்டுள்ளது.

சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட அயோத்தியில் ஏற்கெனவே 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டி ருக்கிறது. இதேபோல அசாதாரண சூழ்நிலை நிலவும் உத்தரபிரதேசத் தின் காஜியாபாத்தில் சில நாட் களுக்கு முன்பு 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டது.

பிரதமர் அறிவுரை

கடந்த 27-ம் தேதி மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “அயோத்தி வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் தீ்ர்ப்பளித்தபோது அரசியல் கட்சிகள், அமைப்புகள், பொதுமக்கள் அமைதி காத்தனர். அதுபோல உச்ச நீதிமன்ற தீர்ப்பின்போதும் அமைதியைப் பேண வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் அண்மையில் கூறும்போது, “அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். உத்தர பிரதேச அரசு தீர்ப்பை முழுமையாக அமல் செய்யும்” என்று தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் உயர்நிலைக் கூட்டம் கடந்த 1-ம் தேதி டெல்லியில் நடந்தது. அப்போது அயோத்தி வழக்கில் சாதகமாக தீர்ப்பு வந்தாலும் வெற்றி ஊர்வலங்களை நடத்தக்கூடாது என்று கண்டிப்புடன் அறிவுறுத்தப்பட்டது.

பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் கடந்த 2-ம் தேதி மும்பையில் கூடி ஆலோசனை நடத்தின. அதில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் முஸ்லிம் அமைப்புகள் அதற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது.

மத்திய அரசு உத்தரவு

தீர்ப்பு தேதி நெருங்கி வருவதால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய உளவுத் துறை சார்பில் அனைத்து மாநில காவல் துறைக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில், “அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த தீர்ப்பினால் நாட் டில் அசாதாரண சூழ்நிலை உருவா கலாம். இதை எதிர்கொள்ள போது மான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக அடிப்படைவாத அமைப்புகளின் செயல்பாடுகளைக் தொடர்ந்து கண் காணிக்க வேண்டும்” என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. உத்தர பிரதேசம், குஜ ராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரு கின்றன. உத்தர பிரதேசத்தில் அரசு அலுவலர்கள், போலீஸாரின் விடுமுறை வரும் 30-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் வரும் 30-ம் தேதி வரை போலீஸாரின் விடுமுறையை அந்த மாநில அரசு ரத்து செய்துள்ளது.

இதுதொடர்பாக மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அயோத்தி தீர்ப்பை கருத்தில் கொண்டு சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட கடந்த 1-ம் தேதி முதல் போலீ ஸார் விடுமுறை எடுக்க தடை விதிக் கப்பட்டுள்ளது. இந்த விடுப்பு தடை வரும் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும்”என்று தெரி விக்கப்பட்டுள்ளது. அயோத்தி உள் ளிட்ட முக்கிய நகரங்களில் மத்திய பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் டெல்லி, மாநிலங்களின் தலைநகர்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x