

மும்பை
மகாரஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், அகந்தை எனும் சேற்றில் மகாராஷ்டிராவின் தேர்ச் சக்கரம் சிக்கி இருக்கிறது என்று சிவசேனா தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைக்க 5 வகையான வாய்ப்புகள் மட்டுமே இருக்கின்றன என்றும் சிவசேனா கட்சி தனது அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்த கடந்த மாதம் 24-ம் தேதி முடிவுகள் வெளியாகின. இதில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன.
ஆனால், ஆட்சி அதிகாரத்தில் சமபங்கு சிவசேனா கேட்பதால், அதை வழங்க மனமின்றி இரு கட்சிகளும் ஆட்சி அமைக்கத் தயக்கம் காட்டி வருகின்றன. இதனால், கடந்த 8 நாட்களுக்கு மேலாக மாநிலத்தில் புதிய ஆட்சி அமையாமல் இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில் சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வமான நாளேடான சாம்னாவில் இன்று அந்தக் கட்சியின் மூத்த எம்பி.சஞ்சய் ராவத் கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நவம்பர் 7-ம்தேதிக்குள் புதிய ஆட்சி அமைக்கப்படாவிட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்படும் என்று நிதியமைச்சர் சுதிர் முன்கந்திவார் பேசியது வருத்தத்திற்குரியது. அவ்வாறு கொண்டுவந்தால், அது நூற்றாண்டில் பாஜகவுக்கு மிகப்பெரிய தோல்வியாக அமையும்.
தேர்தலில் சிவசேனாவுடன் பாஜக கூட்டணி அமைக்காமல் இருநந்திருந்தால், அந்தக் கட்சிக்கு 75 இடங்களுக்கு மேல் கிடைத்திருக்காது. நிலைமை மோசமடையாமல் இருப்பதற்காகவே முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், தேர்தலுக்கு முன்பாகவே, சிவசேனாத் தலைவர் உத்தவ் தாக்கரேவைச் சந்தித்துப் பேசினார்.
மாநிலத்தில் புதிய ஆட்சி அமைவதற்கு 5 விதமான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், அகந்தையை ஒழிக்காவிட்டால் எதுவும் சாத்தியமில்லை.
சிவசேனாவும், பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதால், மக்கள் ஆட்சி அமைக்கக்கூடிய வாய்ப்பை அளித்துள்ளார்கள். ஆனால், தற்போது அகந்தை எனும் சேற்றில் மகாராஷ்டிரா தேர் சிக்கி இருக்கிறது.
ராஜா ஹரிச்சந்திரர், கடவுள் ராமர் ஆகியோர் தங்கள் அளித்த சத்தியத்தை நிறைவேற்றுவதற்காக எந்த பின்வாங்கலும் இல்லாமல் பாடுபட்டார்கள். ஆனால் கலியுகத்தில் தன்னுடைய இலக்கை அடையச் சத்தியத்தை விட்டு விலகிப் பின்னோக்கிச் செல்கிறது பாஜக.
தேவேந்திர பட்னாவிஸ் தானே மீண்டும் முதல்வராக வருவேன் என்று கூறினார், அதையே பிரதமர் மோடியும் வரவேற்றுள்ளார். ஆனால், இந்த குழப்பங்கள் நடக்கும் போது, சிக்கல்களுக்குத் தீர்வு காணக்கூடியவரான அமித் ஷா இன்னும் வராமல் இருப்பது வியப்பாக இருக்கிறது.
தேர்தல் கூட்டணிக்கு முன் போடப்பட்ட ஒப்பந்தங்கள் மிகவும் முக்கியமானது. பட்னாவிஸ் முதல்வர் பதவியை சிவசேனாவுக்கு இரண்டரை ஆண்டுகள் விட்டுத் தர தயாராக இல்லை. தேர்தலுக்கு முன்பாக அதிகாரத்தில் சமபங்கு தருவதாகக் கூறிய பட்னாவிஸ், இப்போது மறுக்கிறார். போலீஸார், சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமானவரித்துறை ஆகியவற்றின் உதவியுடன் ஆட்சி அமைக்க முயல்கிறார்.
மாநிலத்தில் தற்போது 5 விதமான சூழல்கள் உள்ளன. முதல் சூழல் சிவசேனா இல்லாமல் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாது. ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் 40 எம்எல்ஏக்கள் இல்லாவிட்டால் தோல்வி அடையும்.
2-வதாக, கடந்த 2014-ம் ஆண்டு பாஜகவுக்கு தேசியவாத காங்கிரஸ் சுப்ரியா சுலே மூலம் ஆதரவு அளித்தது, அஜித் பவார் மாநிலத்தில் ஆதரித்தார். ஆனால், , 2014-ம் ஆண்டு பெரியதவறு செய்துவிட்டால், இந்த முறை வாய்ப்பில்லை
3வதாக சிவசேனாவுக்கு 56 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள், என்சிபி, காங்கிரஸ் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்க முடியும். மூன்று கட்சிகளுக்கு இடையே குறைந்த பட்ச செயல்திட்டத்தை உருவாக்கி மாநிலத்தின் நலனுக்காகச் செயல்பட முடியும். முதல்வராக ஆட்சியை நடத்தும் தகுதி, திறமை, துணிச்சல் சிவசேனாவுக்கு இருக்கிறது.
4-வதாக சிவசேனாவும், பாஜகவும் கூட்டணி குறித்துப் பேசி, வேறுபாடுகளைக் களைந்து, முதல்வர் பதவியைப் பகிர்ந்து கொண்டு ஆட்சி அமைக்க வேண்டும். இதுதான் சிறந்த முடிவு. ஆனால் அகந்தைச் சேற்றில் சிக்கி இருக்கிறார்கள்.
5-வதாக, பாஜக மற்ற கட்சிகளைப் புலனாய்வு முகமைகள் மூலம் சிதைக்க முயன்று தங்கள் பக்கம் இழுத்து ஆட்சி அமைக்கலாம்.
இவ்வாறு ராவத் தெரிவித்துள்ளார்
பிடிஐ