

ஹைதரபாத்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 29-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் வரும் 5-ம் தேதிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் இல்லாவிட்டால், 50 சதவீத வழித்தடங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்
தெலங்கானாவில் உள்ள அரசுப் பேருந்துக் கழக ஊழியர்கள் தங்களை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டும், பேருந்துக் கழகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட 26 கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த 29 நாட்களாகப் போராடி வருகின்றனர்.
இந்த வேலைநிறுத்தத்தில் ஏறக்குறைய 48 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்றுள்ளார்கள், ஆனால், ஊழியர்களுடன் பேச்சுவார்த்தையை நிராகரித்த முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் அவர்களைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணிக்குத் திரும்ப உத்தரவிட்டார். போக்குவரத்து ஊழியர்கள் பணிக்குத் திரும்பாததையடுத்து, 48 ஆயிரம் ஊழியர்களும் தாங்களாகவே வேலையிழந்ததாகவும் தெலங்கானா அரசு அறிவித்தது. தற்போது 1,200 ஊழியர்கள் மட்டுமே பணிக்குத் திரும்பியுள்ளார்கள்.
இந்நிலையில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அதில் பல்வேறு முக்கிய முடிவுகள் வேலை நிறுத்தப்போராட்டம் தொடர்பாக எடுக்கப்பட்டன.
அதுகுறித்து தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை ஏற்பதற்கு எந்தவிதமான சாத்தியங்களும் இல்லை என்பது அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டது. ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம் அல்ல. போக்குவரத்து ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை அரசு வழங்குகிறது.இதை அவர்களின் குடும்பத்தின் நலன் கருதி வழங்குகிறது.
வரும் 5-ம் தேதிக்குள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து போக்குவரத்து ஊழியர்களும் வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு வேலைக்கு திரும்பலாம். எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாது.
அவ்வாறு வேலைக்குத் திரும்பாவிட்டால், மாநிலத்தில் மொத்தமுள்ள 4,800 வழித்தடங்களில் 50 சதவீதத்தைத் தனியாருக்கு வழங்கிவிடுவோம். அந்த வழித்தடங்களில் தனியாரை பஸ்கள் இயக்க அனுமதிப்போம். 2019-ம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இதைச் செய்ய அரசுக்கு அதிகாரம் உண்டு.
இந்த வேலை நிறுத்தப்போராட்டம் சட்டவிரோதமானது. தொழிலாளர் சங்கத்தின் தலைவர்கள் பேச்சைக் கேட்டு, அவர்களின் வலையில் ஊழியர்கள் விழுந்து எதிர்காலத்தை வீணாக்குகிறீர்கள். கடந்த 4 ஆண்டுகளில் போக்குவரத்து ஊழியர்களின் ஊதியம் 67 சதவீதத்தை உயர்த்தி இருக்கிறது அரசு.
போக்குவரத்து ஊழியர்கள் வேலைக்குத் திரும்பாவிட்டால், பாதி வழித்தடங்களைத் தனியார் மயமாக்குவோம். இதன் மூலம் தனியார், அரசுப் பேருந்து இடையே ஆரோக்கியமான போட்டி ஏற்படும். மக்களுக்குத் தரமான சேவை வழங்கப்படும். தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெலங்கானா போக்குவரத்து கழகத்தின் கட்டுப்பாட்டில் விதிமுறைகளின் அடிப்படையில் பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்படுவார்கள்.
மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் இதே முடிவை எடுத்திருக்கின்றன. அதைப்பின்பற்றித்தான் நாங்களும் எடுக்கிறோம்
இவ்வாறு சந்திரசேகர் ராவ் தெரிவித்தார்
ஐஏஎன்எஸ்