

புதுடெல்லி
அயோத்தி நிலப் பிரச்சினை, சபரிமலை கோயில் விவகாரம் உட்பட 4 மிக முக்கியமான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அடுத்த 10 நாட்களில் தீர்ப்பு வழங்க உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டில் அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. கடந்த மாதம் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகளுக்கிடையே 100 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த வழக்கின் மீதான தீர்ப்பை நாடு ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளது. இது சமூக, மத மற்றும் அரசியல் ரீதியாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தபடியாக கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பு வழங்கியது இதை எதிர்த்து 65 மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு, கடந்த பிப்ரவரி 6-ம் தேதி தீர்ப்பை ஒத்தி வைத்தது.
இதுபோல, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ், தலைமை நீதிபதி அலுவலகத் தையும் கொண்டுவரலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்ற பதிவாளர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவையும் ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்ததையடுத்து, கடந்த ஏப்ரல் 4-ம் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்க பிரான்ஸின் தஸ்ஸோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்களை விசாரித்த ரஞ்சன் கோகோய் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு கடந்த மே 10-ம் தேதி தீர்ப்பை ஒத்தி வைத்தது.
இந்நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெறுகிறார். எனவே, அதற்கு முன்னதாக (10 வேலை நாட்களில்) மேற்கண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 4 வழக்குகளில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.