

பஞ்ச்குலா
பாலியல் பலாத்கார வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத் இன்சான் மீதான தேச துரோக வழக்கு கைவிடப்பட்டது.
ஹரியாணா மாநிலம் சிர்ஸா நகரில் தேரா சச்சா சவுதா ஆசிரமம் உள்ளது. இதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் மீது அதே ஆசிர மத்தில் பணியாற்றிய 2 பெண்கள் பாலியல் பலாத்கார புகார் கூறினர். இது தொடர்பான வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் குர்மீத் ராமுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே தீர்ப்பு வெளி யான நாளில் பெரும் கலவரம் வெடித்தது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 200 பேர் காயமடைந்தனர். இது தொடர் பான வழக்கில் குர்மீத் ராமின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத் இன்சான் உட்பட 36 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இதையடுத்து ஹனிபிரீத் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டனர். இவர்கள் மீது போலீ ஸார் தேசதுரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கை கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம் விசாரித்து வந்தது.
இந்நிலையில், ஹனிபிரீத் உள்ளிட்டோர் மீதான தேச துரோக வழக்கை கைவிடுவதாக நீதிபதி சஞ்சய் சந்திர் நேற்று அறிவித்தார். அதேநேரம், இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய உத்தரவிட்டார். - பிடிஐ