Published : 03 Nov 2019 07:51 AM
Last Updated : 03 Nov 2019 07:51 AM

தெலங்கானாவில் விழாவுக்கு தாமதமாக வந்ததால் தனக்கு தானே ரூ.50 லட்சம் அபராதம் விதித்துக் கொண்ட அமைச்சர்

என்.மகேஷ்குமார்

ஹைதராபாத் 

அரசு விழாவுக்கு தாமதமாக வந்ததால் தெலங்கானா நிதியமைச்சர் ஹரீஷ் ராவ் தனக்குத் தானே ரூ.50 லட்சம் அபராதம் விதித்துக் கொண்டார்.

தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவின் சகோதரி மகன் ஹரீஷ் ராவ். இவர் தெலங்கானா தனி மாநிலப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு, சந்திரசேகர ராவுக்கு உறுதுணை யாக இருந்தார். இதனால் தெலங் கானா மாநிலம் உதயமாகி, டிஆர்எஸ் கட்சி ஆட்சியை பிடித்த தும் இவருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து 2-வது முறை சந்திரசேகர ராவ் ஆட்சியை பிடித்ததும், சமீபத்தில் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, இவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. மாநில நிதி அமைச்சராக ஹரீஷ் ராவ் பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், சித்திபேட்டா மாவட்டம், துப்பாக்கா நகராட்சி சார்பில் மகளிர் சுயஉதவிக் குழு வினருக்கு பிளாஸ்டிக் குப்பை பக்கெட் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. இதில் சிறப்பு விருந்தின ராக அமைச்சர் ஹரீஷ் ராவ் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அமைச்சரால் குறிப் பிட்ட நேரத்துக்கு வரமுடிய வில்லை. இதனால் நிகழ்ச்சி தாமதம் ஆனது. பின்னர் நிகழ்ச்சி தொடங்கியதும் தாமதமாக வந்ததற்கு ஹரீஷ் ராவ் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். மேலும் இதற்காக அவர் தனக்குத் தானே ரூ.50 லட்சம் அபராதம் விதித்துக் கொள்வதாக மேடையில் அறிவித்தார். இந்தப் பணத்தில் நகராட்சி கட்டிடம் அருகே மகளிர் சுயஉதவிக் குழுவுக்கு புதிய கட்டிடம் கட்டித் தருவதாகவும் அவர் உறுதி அளித்தார். இதனை கேட்ட மகளிர் குழுவினர் பலத்த கரவொலி எழுப்பி அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்தனர். அமைச்சரின் இந்த அறிவிப்பால் பொதுமக்களும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x