

நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில், வரும் 13-ம் தேதி இப்தார் விருந்துக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஏற்பாடு செய்துள்ளார். இதில் கலந்துகொள்ளுமாறு முலாயம் சிங், மாயாவதி, கனிமொழி உட்பட பாஜக கூட்டணியில் இடம்பெறாத கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வரும் 13-ம் தேதி டெல்லியில் இப்தார் விருந்துக்கு சோனியா காந்தி ஏற்பாடு செய்துள்ளார். இதில் கலந்துகொள்ளுமாறு முலாயம் சிங் யாதவ் (சமாஜ்வாதி), மாயாவதி, (பிஎஸ்பி), சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட்), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்) எச்.டி.தேவ கவுடா (மதச்சார்பற்ற ஜனதா தளம்), இ.அகமது (ஐயுஎம்எல்), கனிமொழி (திமுக), சுதிப் பந்தோபாத்யாய் (திரிணமூல்) உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுபோல, சரத் யாதவ் (ஐக்கிய ஜனதா தளம்), பரூக் அப்துல்லா (தேசிய மாநாடு), லாலு பிரசாத் யாதவ் (ராஷ்ட்ரிய ஜனதா தளம்), மற்றும் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட இதர கட்சிகளின் முக்கியப் பிரமுகர்களும் இந்த விருந்துக்கு அழைக்கப்பட்டுள் ளனர். எனினும், பாஜக கூட்டணியில் இடம்பெறாத போதிலும் அதிமுக, பிஜு ஜனதா தளம், தெலங்கானா ராஷ்டிர சமிதி உள்ளிட்ட கட்சிக ளுக்கு அழைப்பு விடுக்கப்பட வில்லை.
நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவே பாஜக கூட்டணியில் இடம்பெறாத அனைத்து கட்சிகளுக்கும் இந்த விருந்துக்கு சோனியா அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே இந்த விருந்தில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கலந்துகொள்ள மாட்டார் எனத் தெரிகிறது. அதே நாளில் அவரும் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளதே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது