Published : 02 Nov 2019 03:53 PM
Last Updated : 02 Nov 2019 03:53 PM

ஏர் இந்தியா என் சிதாரை உடைத்து விட்டது: சிதார் இசைக்கலைஞர் ஷுபேந்திர ராவ் காட்டம்

மும்பை, பிடிஐ

பிரபல இந்துஸ்தானி சிதார் இசைக் கலைஞர் ஷுபேந்திர ராவ் அமெரிக்காவுக்கு கச்சேரிக்காக ஏர் இந்தியா விமானத்தில் சென்றார், அங்கு போய் பார்த்த பிறகுதான் தெரிந்தது அவரது சிதார் வாத்திய இசைக் கருவி உடைந்து போயுள்ளது என்று.

நன்றாக இருந்த சிதார் ஏர் இந்தியா ஊழியர்களின் முரட்டுத்தனமான கையாளுதலில்தான் உடைந்து போனது என்று அவர் தன் முகநூல் பக்கத்தில் நெடிய பதிவு ஒன்றில் கடுமையாகச் சாடியுள்ளார்.

இசைக்கலைஞர்கள் பயணிக்கும் போது வாத்திய இசைக்கருவிகளை எப்படிக் கையாள வேண்டும் என்பதில் ஏர் இந்தியா ஊழியர்களுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் கவன உணர்வு தேவை என்று அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

முகநூலில் அவர் இது தொடர்பாகக் கூறியதாவது:

“மீண்டும் ஒரு முறை இது நிகழ்ந்து விட்டது. என்னுடைய சிதார் மீண்டும் ஒருமுறை உடைக்கப்பட்டுள்ளது. இம்முறை நம் ஏர் இந்தியாவின் கைங்கரியம். நியூயார்க்கில் வேதிக் ஹெரிடேஜில் கச்சேரிக்காக வந்தேன். ஆனால் சிதார் உடைந்த நிலையில் இங்கு வந்துள்ளேன், எப்படி ஒருவர் இவ்வளவு அலட்சியமாகவும் உணர்வற்றவர்களாகவும் இருக்க முடியும்?.

இது நட்டநடுவில் பிளந்துள்ளது. சிதார் இசைக்கருவி இவ்வாறாக உடைய வாய்ப்பேயில்லை. பலரும் தங்கள் ஆலோசனைகளை எனக்கு வழங்கிவருகின்றனர், ஆனால் ஏர் இந்தியா அதிகாரிகள், ஊழியர்கள் இன்னும் கொஞ்சம் கவனமுடன் இசைக்கருவிகள் விவகாரத்தில் செயல்பட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

ஷுபேந்திராவுக்கு இது ஏற்படுவது முதல் முறையல்ல கடந்த நவம்பரில் அவர் டெல்லியிலிருந்து சிட்னிக்குச் சென்ற போதும் விமானத்தில் சரியாகக் கையாளாமல் இவரது சிதார் உடைந்து விட்டது.

“எப்போது இது நிறுத்தப்படும், இசைக்கச்சேரிக்குச் செல்பவர்களின் கருவியை உடைத்து விட்டால் அவர்கள் கதி என்ன ஆகும்? இப்போதெல்லாம் பயணம் முடிந்த பிறகு பயணம் எப்படி இருந்தது என்று என்னிடம் யாரும் கேட்பதில்லை மாறாக சார் சிதார் நன்றாக வந்து சேர்ந்ததா என்றே கேட்கின்றனர்” என்று மேலும் தன் முகநூல் பதிவில் கூறியுள்ளார்.

சிதார் இசைக்கருவியினுள் ஏதேனும் இருக்கிறதா என்பதை ஆராய அதனை சோதனையின் போது உடைக்கின்றனர் என்று குற்றம்சாட்டிய ஷுபேந்திரா ஸ்கேன் முறை இல்லையா என்று கேள்வி எழுப்பியதோடு ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் இன்னொரு முறை எந்த ஒரு இசைகருவையை உடைத்தாலும் கடும் அபராதம் விதிக்க வேண்டும், என்று அவர் மத்திய வான்வழிப்போக்குவரத்து அமைச்சர் சமூகவலைத்தளப் பக்கங்களையும் தனது இந்தப் பதிவோடு டாக் செய்து பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x