Published : 02 Nov 2019 01:25 PM
Last Updated : 02 Nov 2019 01:25 PM

ஹரியாணாவில் நிலத்தில் சருகுகளை எரித்த விவசாயிகள்: தடையை மீறியதால் நோட்டீஸ்

சண்டிகர்
டெல்லியில் கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ள நிலையில் அதன் எல்லையையொட்டிய ஹரியாணாவில் பல இடங்களில் இன்றும் விவசாயிகள் நிலத்தில் காய்ந்த சருகுகள், கழிவுகளை எரித்தாக புகார் எழுந்துள்ளது.

தலைநகர் டெல்லியில் கடந்த சில ஆண்டுகளாகவே இதுவரை இல்லாத அளவு காற்று மாசு ஏற்பட்டு பெரும் பாதிப்பு உருவாகி வருகிறது. டெல்லியை சுற்றியுள்ள உத்தர பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லைப்புற பகுதி விவசாயிகள் தங்கள் நிலத்தில் அறுவடைக்கு பிறகு காய்ந்த சருகுகளை எரிப்பதால் பெருமளவு காற்று மாசு ஏற்படுகிறது. இதையடுத்து விவசாயிகள் நிலத்தில் சருகுகளை எரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் காற்று மாசு இந்த ஆண்டில் இல்லாத அளவுக்கு மிக மோசமான நிலையை தொட்டு, நெருக்கடி நிலையை எட்டியுள்ளது. மக்கள் சுவாசிப்பதில் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

காற்று மாசு குறியீ்ட்டின் அளவு உச்ச பட்சமாக நேற்று 582 புள்ளிகளைத் தொட்டது. இந்த ஆண்டில் முதல்முறையாக இதுபோன்ற மோசமான, நெருக்கடியான நிலையை அடைந்தது. ஆனால், இன்று காலை நிலவரப்படி காற்று மாசின் அளவு 459 புள்ளிகளை எட்டியுள்ளது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தடுப்பு ஆணையம் வரும 5-ம் தேதிவரை டெல்லி மற்றும் என்சிஆர் மண்டலத்தில் கட்டிடப்பணிகளில் ஈடுபட தடைவிதித்துள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.


இதையடுத்து விவசாயிகள் தங்கள் நிலத்தில் சருகுகளை எரிக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். உத்தர பிரதேச மாநிலம் பிலிபட்டில் தங்கள் நிலத்தில் காய்ந்த சருகுகளை எரித்த 300 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தர பிரதேச போலீஸாருக்கு உத்தரவிட்டது. இதை ஏற்று அவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்தநிலையில் ஹரியாணாவில் பல இடங்களில் இன்றும் விவசாயிகள் நிலத்தில் காய்ந்த சருகுகள், கழிவுகளை எரித்தாக புகார் எழுந்துள்ளது. கத்தியாலில் காய்ந்த சருகுகளை எரித்த விவசாயிகளுக்கு அதிகாரிகள் இன்று நோட்டீஸ் வழங்கினர்.

விவசாயிகள் எரிக்காமல் இருக்க அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் நேரடியாக சென்று கண்காணித்து வருகின்றனர். எனினும் இன்று காலை பல இடங்களில் தங்கள் நிலத்தில் சருகுகளை எரித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x