Published : 02 Nov 2019 11:58 AM
Last Updated : 02 Nov 2019 11:58 AM

தமிழகத்தில் பேருந்துகளை சீரமைக்க ஜெர்மன் நிதியுதவி: ஏஞ்சலா மெர்கல் அறிவிப்பு

புதுடெல்லி

தமிழகத்தில் போக்குவரத்து துறையை சீரமைக்க இந்திய ரூபாய் மதிப்பில் 1,600 கோடி ரூபாய் வழங்கப்படும் ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்கல் அறிவித்துள்ளார்.

இந்தியா, ஜெர்மனி இடையே 5-வது கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்கல் வந்துள்ளார். டெல்லியில் உள்ள ஹைதராபாத் பவனில் பிரதமர் மோடியை ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்கல் நேற்று சந்தித்துப் பேசினார்.

இந்த கூட்டத்தில் இரு தலைவர்களும் கூட்டாக 5 அறிவிப்புகளையும், விண்வெளி, விமானப் போக்குவரத்து, கடற்சார் தொழில்நுட்பம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட 11 துறைகளில் 20க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

அதன்பின் நடந்த நிருபர்கள் சந்திப்பில் பிரதமர் மோடியும், ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்கலும் விளக்கம் அளித்தனர். அப்போது பிரதமர் மோடி பேசுகையில் ‘‘2022-ஆண்டுக்குள் புதிய இந்தியாவை உருவாக்க நாங்கள் உறுதி பூண்டிருக்கிறோம். குறிப்பாகத் தொழில்நுட்பம், பொருளாதாரம் ஆகியவற்றில் நிபுணத்துவம் வாய்ந்த ஜெர்மனிக்கு இது பயனுள்ளதாக இருக்கும்’’ எனக் கூறினார்.

ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்கல் பேசுகையில், " புதிய மற்றும் அதிநவீன தொழில் நுட்பத்துறைகளில் இந்தியாவுடன் ஜெர்மனி இணைந்து செயல்பட ஒப்பந்தம் செய்துள்ளோம். குறிப்பாக 5ஜி, செயற்கை நுண்ணறிவு போன்ற சவாலான துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவோம்" எனத் தெரிவித்தார்.

இந்தநிலையில் ஏஞ்சலா மெர்கல் இன்று டெல்லியில் தொழில்துறையினரை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில் ‘‘தமிழகத்தில் போக்குவரத்து துறையை சீரமைக்க இந்திய ரூபாய் மதிப்பில் 1,600 கோடி ரூபாய் வழங்கப்படும். டீசல் பேருந்துக்கு பதில் மின்சார பேருந்துகளை ஏன் இயக்க வேண்டும் என்பதற்கு டெல்லி காற்று மாசே நல்ல உதாரணம்’’ எனக் கூறினார். ஏஞ்சலா மெர்கல் இன்று டெல்லி மெட்ரோ ரயிலிலும் பயணம் செய்யவுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x