Published : 01 Nov 2019 03:50 PM
Last Updated : 01 Nov 2019 03:50 PM

பரபரப்பாகும் மகாராஷ்டிரா: 7-ம்தேதிவரை கெடு; அதன்பின் குடியரசு தலைவர் ஆட்சி: பாஜக தலைவர் பேச்சு

மும்பை

மகாராஷ்டிராவில் 7-ம் தேதிக்குள் புதிய ஆட்சி அமையாவிட்டால், அதன்பின் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்படும் என்று நிதியமைச்சரும், மகாராஷ்டிரா பாஜக மூத்த தலைவருமான சுதிர் முங்கந்திவார் தெரிவித்துள்ளார்.

மகாரஷ்டிராவில் தேர்தல் முடிந்து 8 நாட்கள் ஆகியும், சிவசேனா, பாஜக இடையே அதிகாரப் போட்டி காரணமாக புதிய அரசு அமைவதில் இழுபறி நீடித்துவருவதையடுத்து, இந்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த 288 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இதில் சிவசேனா 56 இடங்களிலும், பாஜக 105 இடங்களிலும் வென்றன.ஆட்சியில் சமபங்கு தருவதாக மக்களவைத் தேர்தல் கூட்டணியின் போது பாஜக, சிவசேனா இடையே ஒப்பந்தம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த ஒப்பந்தத்தின்படி பாஜக நடக்க வேண்டும் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தி வருகிறார்.

ஆனால், அதுபோன்ற உறுதிமொழி ஏதும் பாஜக சார்பில் வழங்கவில்லை என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால், இரு கட்சிகளும் ஆட்சி அமைப்பது தொடர்பாகப் பேச்சு நடத்தாமல் இருப்பதால் இழுபறி நீடித்து வருகிறது.

தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைக்க முயலும் என்ற பேச்சி நிலவியது. ஆனால், தேசியவாத கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் மக்கள் எங்களை எதிர்க்கட்சி வரிசையில் அமருவதற்கே உத்தரவிட்டுள்ளார்கள் என்று கூறி ஒதுங்கிக்கொண்டார். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இதில் ஏதாவது ஒரு கட்சியுடன் சேர்ந்தால்கூட சிவசேனாவால் ஆட்சியமைக்க முடியாது.

இந்த சூழலில் சிவசேனாவுக்கு, பாஜகவுடன் சேர்ந்தால் மட்டுமே ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க முடியும். சிவசேனாவுக்கும் பாஜகவைவிட்டால் வேறு வழியில்லை, பாஜகவுக்கும் சிவசேனாவை அனுசரித்து செல்லாவிட்டால் வேறு வழியில்லை என்ற நிலையில் இருக்கிறது.

ஆனால், ஆட்சியில் சமபங்கு கேட்டு சிவசேனா தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதால், புதிய ஆட்சி அமைவது தள்ளிக்கொண்டே செல்கிறது. இப்போது இருக்கும் சட்டப்பேரவைக் காலம் வரும் 8-ம் தேதியுடன் முடிகிறது. அதற்குள் புதிய ஆட்சி அமைக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

இந்த சூழலில் பாஜக மூத்த தலைவரும், நிதியமைச்சருமான சுதிர் முங்கந்திவார் தனியார் சேனல் ஒன்றுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறுகையில், " தீபாவளி பண்டிகை வந்ததால், சிவசேனாவுடன் எங்களால் பேச்சு நடத்த முடியவில்லை. ஆனால், அடுத்த சில நாட்களில் ஆட்சி அமைக்கும் பேச்சு தொடங்கும் என நம்புகிறேன்.

மகாராஷ்டிரா மக்கள் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை அளிக்கவில்லை. பாஜக, சிவசேனா கூட்டணிக்கும் அளிக்கவில்லை. ஆனால், கூட்டணியைக் கடந்து எங்கள் நட்பு வலுவாகத்தான் இருக்கிறது.விரைவில் புதிய ஆட்சி அமைப்பதற்கான பேச்சைத் தொடங்குவோம் என்று நம்புகிறேன். இந்த பேச்சும் குறிப்பிட்ட காலத்துக்குள் தொடங்க வேண்டும். அதாவது 7-ம் தேதிக்குள் புதிய ஆட்சி அமையாவிட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்படும்.

இப்போது ஆட்சி அமைவதற்குப் பெரிய தடைக்கல்லாக இருப்பது சமபங்கு அதிகாரம் வேண்டும் என்ற சிவசேனா கோரிக்கைதான். ஆனால், பாஜகவைப் பொறுத்தவரை அந்த கோரிக்கை ஏற்கப்படாது. ஏனென்றால், தேவேந்திர பட்னாவிஸ் ஏற்கனவே முதல்வராக அறிவிக்கப்பட்டு விட்டார்.

இந்த குழப்பத்துக்குத் தீர்வு காண இரு கட்சிகளின் தலைவர்களும் அமர்ந்து பேசினால் முடிவு கிடைக்கும். தேவைப்பட்டால், பாஜக மத்திய தலைமை தலையிட்டுத் தீர்த்துவைக்கும். இந்த பேச்சைத் தொடங்க பாஜக தயாராக இருக்கிறது, புதிய அரசை அமைக்க ஆர்வமாக இருக்கிறது" எனத் தெரிவித்தார்

அரசுஅமைப்பது குறித்து முங்கந்திவார் பேசியது தொடர்பாக சிவசேனா எம்.பி சஞ்சய்ராவத் நிருபர்களிடம் கூறுகையில், " பாஜகவைப் போல், சிவசேனாவும் முன்கூட்டியே அரசை அமைத்திருக்க முடியும். நாங்கள் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டோம். பிரச்சினை என்பது சிவசேனா, பாஜக அல்ல, மகாராஷ்டிரா மக்கள்தான்" எனத் தெரிவித்தார்

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x