

பாரதிய ஜனதா கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பதுதான் டெல்லு அரசியல் வட்டாரத்தில் இப்போது பரபரப்பு பேச்சாக இருக்கிறது.
ராஜ்நாத் சிங்குக்கு, அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என ஆரம்பம் முதலே தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், பாஜக தலைவர் பதவிக்கு தகுதியானவர்கள் பட்டியலில் பலரது பெயர் அடிப்பட்டு வந்தாலும், ஜெகத் பிரகாஷ் நட்டா பெயர்தான் முதன்மையானதாக உள்ளது.
ஹிமாச்சல பிரதேச ராஜ்யசபா எம்.பி.யான ஜெ.பி.நட்டா, அமித்ஷாவின் நெருங்கிய நண்பர்.
பிரதமர் பதவியேற்கவுள்ள நரேந்திரமோடியின் நம்பிக்கைக்குரிய அமித்ஷாவின் நண்பர் என்பதால் ஜெ.பி.நட்டாவுக்கு கூடுதல் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பாஜக மூத்த தலைவர்கள் ஆதரவைப் பெற்றுள்ளதோடு, ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் ஆதரவைப் பெற்றுள்ளார் ஜெ.பி.நட்டா.
அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தின் மாணவர் தலைவராக தனது அரசியல் வாழ்வை 1978-ல் துவக்கினார் நட்டா. 1991 முதல் 94 வரை, நட்டா பாஜக இளைஞரணியில் பணியாற்றியுள்ளார். அப்போது அமித் ஷா, நிதின் கட்காரி ஆகியோருடன் அவர் இணைந்து பணியாற்றிருக்கிறார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், ஹிமாச்சல பிரதேசத்தில் 4 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற பெரும் பங்காற்றியிருக்கிறார். ஹிமாச்சல் பிரதேசத்தில், காங்கிரஸ் செல்வாக்கு கூடுதலாக காணப்பட்ட நிலையிலும், பாஜக அமோக வெற்றி பெற்றிருப்பது, நட்டாவின் முயற்சியால் என்றே கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், ஹிமாச்சல் பிரதேசத்தில் வேட்பாளர்களை தேர்வு செய்வது முதல் அனைத்து பொறுப்புகள் நட்டாவிடம் ஒப்படைக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு நட்டா தேர்தல் வெற்றியை உறுதி செய்திருக்கிறார், என ஹிமாச்சலத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
நட்டா, சத்தீஸ்கர் மாநில பாஜக தலைவராகவும் உள்ளார். இந்நிலையில், நட்டா பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அது ஹிமாச்சலப் பிரதேசத்திற்கு பெருமை சேர்க்கும் என முன்னாள் முதல்வர் பிரேம்குமார் துமால் கூறியுள்ளார்.