மகாராஷ்டிராவில் எதிர்கட்சியாகவே செயல்படுவோம்: முன்னாள் துணை முதல்வர் அஜித்பவார் உறுதி

மகாராஷ்டிராவில் எதிர்கட்சியாகவே செயல்படுவோம்: முன்னாள் துணை முதல்வர் அஜித்பவார் உறுதி
Updated on
1 min read

மும்பை
மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சி வரிசையில் அமரவே மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர், நாங்கள் எதிர்கட்சியாகவே செயல்படுவோம் என தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான அஜித் பவார் உறுதிபட தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த 21-ம் தேதி தேர்தலும் 24-ம் தேதி வாக்குகளும் எண்ணப்பட்டன. இதில் சிவசேனா கட்சிக்கு 56 இடங்களும், பாஜகவுக்கு 105 இடங்களும் கிடைத்தன.

ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை. ஆனால், பாஜகவிடம் தற்போது 105 இடங்கள் மட்டுமே இருப்பதால் சிவசேனா ஆதரவோடுதான் ஆட்சி அமைக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. ஆனால் ஆட்சியில் சமபங்கு வேண்டும் என சிவசேனா வலியுறுத்துகிறது. இதனால் மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

மகாராஷ்டிர மாநில பாஜக சட்டப்பேரவை கட்சித் தலைவராக முதல்வர் பட்னாவிஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதுபோலவே, சிவசேனா சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஏக்னாத் ஷிண்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆட்சியில் 50;50 என்ற நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என சிவசேனா உறுதிபட தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை ஆதித்ய தாக்கரே உள்ளிட்ட சிவசேனா தலைவர்கள் நேற்று சந்தித்து பேசினர். சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் திடீரென தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை நேற்று சந்தித்து பேசினார்.

இதனால் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா ஆட்சியை கைபற்ற முயலுவதாக தகவல்கள் வெளியாகின.
இதுதொடர்பாக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சிவசேனா தரப்பில் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான அஜித் பவார் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சி வரிசையில் அமரவே மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். நாங்கள் எதிர்கட்சியாகவே செயல்படுவோம். ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக – சிவசேனா இடையே ஏற்பட்டுள்ள மோதல் முழுமையாக அவர்களது பிரச்சினை.

இதுதொடர்பாக நாங்கள் ஏதும் கூற விரும்பவில்லை. அவர்களுக்குள்ள பிரச்சினையை தீர்த்துக் கொண்டு ஆட்சி அமைப்பார்கள் என எண்ணுகிறேன். அதுபோலவே விரைவில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகள் ஆளுநரை சந்தித்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவது தொடர்பாக முறையிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in