

பிடிஐ
டெல்லி விமான நிலையத்தில் இன்று அதிகாலையில் சந்தேகத்திற்கிடமான ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டு இருந்த பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது, இரண்டு மணிநேரங்களுக்கு பயணிகள் நடமாட்டம் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து துணை காவல் ஆணையர் (விமான நிலையம்) சஞ்சய் பாட்டியா கூறியதாவது:
அதிகாலை 1 மணியளவில் ஒரு மணிக்கு அழைப்பு வந்தது. அதைத் தொடர்ந்து 3வது முனையத்தின் பயணிகள் வருகை வாயில் எண் 2 இல் பை கண்டுபிடிக்கப்பட்டது. சிஐஎஸ்எஃப் உதவியுடன் பை அகற்றப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. இது இன்னும் திறக்கப்படவில்லை. அதற்குள் சில மின்சார கம்பிகள் இருப்பது போல் தெரிகிறது.
அதனை சோதனை செய்ததில் ஆரம்பக் கட்ட தகவல்கள்படி பையினுள் ஆர்டிஎக்ஸ் வெடிபொருள் இருந்ததை உறுதிசெய்யப்பட்டுள்ளன. வெடிபொருளின் சரியான தன்மையை ஆய்வு செய்து வருகிறோம்.
இந்த வெடிபொருள் அடுத்த 24 மணிநேரங்களுக்கு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது, அதன் பின்னரே அதைப் பற்றி ஏதேனும் உறுதியாகக் கூற முடியும். இது ஒரு வெடிகுண்டாகவோ அல்லது சக்திவாய்ந்த வெடிக்கும் சாதனமாக (IED) இருக்கலாம், ஆனால் தற்போது எதையும் சொல்வதற்கில்லை. இன்று அதிகாலை வெடிகுண்டுப் பை கண்டுபிடிக்கப்பட்ட அடுத்த இரண்டுமணிநேரம் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. விமான நிலைய வளாகத்தின் பாதுகாப்பை நாங்கள் அதிகரித்துள்ளோம்
இவ்வாறு துணை காவல் ஆணையர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியது.இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நாசவேலை தடுப்புக்கான முழுமையான சோதனையை சி.ஐ.எஸ்.எஃப் மற்றும் டெல்லி காவல்துறையினர் மேற்கொண்டனர். உயர் பாதுகாப்பு வளாகத்திற்கு வெளியே உள்ள சாலைகளும் தடுக்கப்பட்டன. அதன் பின்னர் அதிகாலை 4 மணியளவில் பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டது.
டெல்லி விமான நிலையத்தில் மூன்று முனையங்கள் உள்ளன மற்றும் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் டெர்மினல் -3 இலிருந்து இயக்கப்படுகின்றன.