

புதுடெல்லி
மோசடிக்கு ஆளான பிஎம்சி வங்கியில் இருந்து பணம் எடுக்க ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், பதிலளிக்குமாறு ரிசர்வ் வங்கி, மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மும்பையில் பிஎம்சி எனப்படும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி கடன் வழங்கியதில் முறைகேடுகள் இருப்பது தெரிய வந்ததால் வங்கியின் செயல்பாடுகளை தணிக்கை செய்யவும் அதற்கு முன்பு புதிய கடன் மற்றும் சேமிப்பு திரட்டுவதற்கும் ரிசர்வ் வங்கி தடை விதித்தது. வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக வாடிக்கையாளர் 40 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஹவுசிங் டெவலப்மெண்ட் மற்றும் இன்பிராஸ்ட்ரக்சர் லிமிடெட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு ரூ. 6,500 கோடி வரை பிஎம்சி வங்கி கடன் வழங்கியுள்ளது. இது ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாட்டு வரம்பை விட 4 மடங்கு அதிகமாகும். அத்துடன் வங்கியின் மொத்த சொத்து மதிப்பான ரூ.8,800 கோடியில் 73 சதவீதம் இந்நிறுவனத்துக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.
பிஎம்சி வங்கி மோசடி தொடர்பாக மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கடன் வாங்கிய ஹெச்டிஐஎல் ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. அதன் இயக்குநர்கள் சரங் வாத்வான், ராகேஷ் வாத்வான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரூ.3,500 கோடி மதிப்பிலான சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. பிஎம்சி வங்கியின் இயக்குநர் ஜாய் தாமஸ் மற்றும் வங்கியின் முன்னாள் தலைவர் வார்யம் சிங்கும் கைதாகியுள்ளனர்.
பிஎம்சி வங்கி மோசடியில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததை உறுதிப்படுத்தியுள்ள அமலாக்கப்பிரிவு இதுதொடர்பாக சோதனைகள் நடத்தி வருகிறது.
இந்தநிலையில் பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை எடுக்க ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்கக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.என். படேல் மற்றும் ஹரி சங்கர் ஆகியோர் அடங்கி அமர்வு, இந்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்யக்கோரி நிதியமைச்சகம், டெல்லி அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் பிஎம்சி வங்கி நிர்வாகம் ஆகியவற்றுக்கு உத்தரவிட்டது.
இதே கோரிக்கைக்காக சில தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் மறுத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.