

மும்பை
மகாராஷ்டிராவில் முதல்வர் பதவி எங்களுக்குத்தான் அதில் மாற்றம் ஏதும் இல்லை, நாங்கள் நினைத்தால் நிலையான ஆட்சி அமைக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய முடியும் என்று பாஜகவுக்கு மறைமுகமாக சிவசேனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த 288 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இதில் சிவசேனா 56 இடங்களிலும், பாஜக 105 இடங்களிலும் வென்றன.
இரு கட்சிகளும் கடந்த 2014-ம் ஆண்டு வென்ற இடங்களைக் காட்டிலும் குறைவாகவே வென்றிருந்தன. ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை என்பதால், இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மக்களவைத் தேர்தலின்போது பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா அளித்த வாக்குறுதியின்படி மகாராஷ்டிரா அரசில் சமபங்கு உரிமை வழங்கப்பட வேண்டும் என்று உடன்பாடு செய்யப்பட்டுள்ளது அதன்படி பாஜக நடக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
ஆனால், கூட்டணி ஆட்சி அமைக்கச் சம்மதம் தெரிவிக்கும் பாஜக, ஆட்சி அதிகாரத்தைச் சமபங்கு அதாவது, முதல்வர் பதவியை இரண்டரை ஆண்டுகளுக்கு விட்டுக்கொடுக்க தயாரில்லை.
இதனால், இரு கட்சிகளும் சுயேட்சை எம்எல்ஏல்க்கள் சிறுகட்சி எம்எல்ஏக்கள் ஆதரவை பெறத் தொடங்கியுள்ளனர்.
மேலும், பாஜக சார்பில் ஆட்சியில் சமபங்கு என்ற எந்த வாக்குறுதியும் சிவசேனாவுக்கு அளிக்கவில்லை என்று தேவேந்திர பட்னாவிஸ் பேசியது சிவசேனாவுக்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியதால், பேச்சுவார்த்தையையும் உத்தவ் தாக்கரே ரத்து செய்தார்.
இதற்கிடையே பாஜகவின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தேவேந்திர பட்நாவிஸ் தேர்வு செய்யப்பட்டு அடுத்த முதல்வராகப் பதவி ஏற்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதனால், மாநிலத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே ஆட்சி அதிகாரத்தைச் சமபங்கு பிரித்துக்கொள்வதில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதால்,புதிய ஆட்சி அமைவதிலும் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
இதற்கிடையே தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நேற்று சிவசேனாக் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத் சந்தித்துப் பேசினார். இந்த பேச்சின் விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றபோதிலும், தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவிக்கச் சென்றேன் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், " மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக இதுவரை சிவசேனாவுக்கும், பாஜகவுக்கும் இடையே எந்தவிதமான பேச்சும் நடைபெறவில்லை. ஆனால், மகராஷ்டிராவில் முதல்வராக சிவசேனாவைச் சேர்ந்தவர்தான் வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜகவிடம் இருந்து எந்தவிதமான கெடுவும் வைக்கவில்லை. ஏனென்றால் அவர்களெல்லாம் பெரிய மனிதர்கள்.
ஒன்று சொல்லிக்கிறோம், சிவசேனா முடிவுசெய்தால், மாநிலத்தில் நிலையான ஆட்சி அமைப்பதற்கான ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்க முடியும். ஆனால், மக்கள் 50:50 என்ற சமபங்கு அளவில் பாஜகவும், சிவசேனாவும் ஆட்சி அமைக்க வேண்டும் என்றுதான் வாக்களித்துள்ளார்கள். அது மக்கள் முன்னிலையில் கொண்டு செல்லப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்
இதற்கிடையே எம்.பி. சஞ்சய் ராவத் ட்விட்டரில் இந்தியாவில் பதிவிட்ட கருத்தில் " அரசரே, உங்களின் அகங்காரத்தை எங்களிடம் திணிக்காதீர்கள். ஏராளமான அலெக்சான்டர்கள் காலத்தின் கடலில் மூழ்கியிருக்கிறார்கள் என்பதை மறக்காதீர்கள்" என மறைமுகமாக பாஜகவை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சிவசேனாவுக்கு ஆதரவாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரும் கருத்துத் தெரிவித்துள்ளது நெருக்கத்தை அதிகப்படுத்தியுள்ளது. சரத் பவார் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், " கடந்த 1990களில் 50:50 என்ற உடன்பாட்டில் பாஜகவும், சிவசேனாவும் ஆட்சிஅமைத்துள்ளன. கடந்த காலங்களில் இரு கட்சிகளும் ஆட்சியில் சமபங்கை பகிர்ந்து கொண்ட அனுபவம் இருக்கிறது. ஆதலால், சிவசேனா வலியுறுத்துவதில் எந்தவிதமான தவறும் இல்லை கடந்த 1995 முதல் 1999-ம் ஆண்டுவரை மகாராஷ்டிராவில் சிவசேனாவின் சார்பி்ல மனோகர் ஜோஷி முதல்வராக இருந்தவர்தானே" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்
பிடிஐ