

நிலம் கையகப்படுத்தும் மசோதா தொடர்பான நாடாளுமன்றக் குழு கூட்டத்துக்கு முக்கிய அரசுத் துறை செயலாளர்கள் நான்குபேருமே வரவில்லை. இது நாடாளுமன்றக் குழுவுக்கு நேர்ந்த அவமானம் என குழுவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
நிலம் கையகப்படுத்தும் மசோதா தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அடங்கிய நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரின் புகார்கள், கோரிக்கைகளையும் இக்குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்
சட்ட விவகாரங்கள், நாடாளுமன்ற விவகாரங்கள், ஊரக வளர்ச்சி, வர்த்தகம் ஆகிய நான்கு அமைச்சரவை செயலாளர்களும் ஜூலை 16-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என நாடாளுமன்றக் குழு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. பல்வேறு கேள்விகளுக்கு அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டால், வரும் 22-ம் தேதி முதல் மசோதாவின் உள் ஷரத்துகள் குறித்து பரிசீலிக்க முடிவு செய்திருந்தது.
ஆனால், நேற்று நடந்த கூட்டத்துக்கு நான்கு அமைச்சரவைச் செயலாளர்களும் வரவில்லை. இது நாடாளுமன்றக் குழுவின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இப்பிரச்சினையை முதலில் எழுப்பினார். பின்னர், சமாஜ்வாதியின் ராம்கோபால் யாதவ், பிஜு ஜனதா தளத்தின் பி.மஹ்தாப், காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோரும் கடும் கண்டனம் தெரிவித்துப் பேசினர்.
“தனிநபர்கள் மற்றும் அமைப்பு களிடமிருந்து பெற்ற புகார்கள், மனுக்கள் தொடர்பாக பல்வேறு அரசுத் துறைகளிடமிருந்து விளக்கம் எதிர்பார்த்தோம். ஆனால், அதிகாரிகள் யாரும் வரவில்லை. நாடாளுமன்றம் மட்டுமின்றி, நாடாளுமன்றக் குழுவையும் எதிர்கொள்ள அரசு வெட்கப்படுகிறது என்பதையே இது காட்டுகிறது. அதிகாரிகளிடம் போதுமான விளக்கம் இல்லை. எனவேதான் அவர்கள் வரவில்லை” என எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
கூட்டமா கேலிக்கூத்தா?
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ.பிரையன், “இது கேலிக்கூத்தா அல்லது ஆலோசனைக் கூட்டமா? கடந்த முறை குழுவினர் ஒத்துழைக்கவில்லை. தற்போது அரசு அதிகாரிகள்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
குழுவுக்கு அவமானம்
“அனைத்துக் கட்சியைச் சேர்ந்தவர்களும் இதைக் கடுமையாக ஆட்சேபித்துள்ளனர். இது குழுவுக்கு நேர்ந்த அவமானமாகக் கருதுகின்றனர்” என நாடாளுமன்றக் குழு உறுப்பினர் தெரிவித்தார்.
குழுவில் இடம்பெற்றுள்ள சில பாஜக எம்.பி.க்களும் அதிகாரிகளின் செயலால் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சரத்பவார் கூறும்போது, “நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி, நில மசோதா குறித்துப் பேசுகிறார். ஆனால், விவாதம் நடைபெற வேண்டிய இடத்தில் யாரும் வரவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
“மசோதா தொடர்பாக பிரதமர் வெளியிடங்களில் பேசி வருகிறார். நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் சொற்பொழிவாற்றி வருகிறார். ஆனால், நாடாளுமன்றக் குழு தனது பணியைச் செய்து வருகிறது” என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.