கர்தார்பூர் வழித்தட நிகழ்ச்சி; கலந்து கொள்பவர்கள் ஒப்புதல் பெற வேண்டும்: வெளியுறவுத்துறை விளக்கம்

கர்தார்பூர் வழித்தட நிகழ்ச்சி; கலந்து கொள்பவர்கள் ஒப்புதல் பெற வேண்டும்: வெளியுறவுத்துறை விளக்கம்
Updated on
1 min read

புதுடெல்லி

கர்தார்பூர் வழித்தடம் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் நிச்சயமாக இந்திய அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும் என வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்தார்.

பாகிஸ்தான் எல்லையை ஒட்டி, பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள பகுதி கர்தார்பூர். சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக் தேவ், தமது இறுதி காலத்தை இங்கு கழித்ததாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், அவரது நினைவாக கர்தார்பூரில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ‘தர்பார் சாஹிப்' என்ற பெயரில் குருத்வாரா அமைக்கப்பட்டது.

இந்த குருத்வாராவுக்கு செல்வது என்பது சீக்கியர்களின் வாழ்நாள் கடமைகளில் ஒன்றாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. எனினும், பாகிஸ்தானுக்கு விசா வாங்கி செல்வதில் பல்வேறு சிரமங்கள் இருந்ததால் இந்தியாவின் தேரா பாபா நானக் குருத்வாராவுக்கும், கர்தார்பூர் குருத்வாராவுக்கும் இடையே வழித்தடம் அமைக்க இருதரப்பிலும் முடிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே கர்தார்பூர் வழித்தடம் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டன. இந்தியாவில் இந்தக் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், பாகிஸ்தானில் இவ்வழித்தடம் அமைக்கப்பட்டுவிட்டது.
இதன் தொடர்ச்சியாக, கர்தார்பூர் வழித்தடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தானது.

கர்தார்பூர் வழித்தடத்தை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த மாதம் 9-ம் தேதி திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்து வருகிறது. இந்த அழைப்பை ஏற்றுக் கொள்வதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சித்து தெரிவித்து இருந்தார்.
இவர்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளபோதிலும், அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்தியாவும் அனுமதி வழங்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இந்தநிலையில் இதுபற்றி வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவிஷ் குமார் கூறுகையில் ‘‘கர்தார்பூர் வழித்தடம் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்தியர்கள் பலருக்கும் பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது. அழைப்பை ஏற்றுக் கொண்டாலும் கூட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் நிச்சயமாக இந்திய அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும்’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in