படேலின் கனவு நனவானது; 370, 35ஏ பிரிவை நீக்கி தீவிரவாதத்தின் நுழைவுவாயில் மூடப்பட்டுள்ளது: அமித் ஷா பெருமிதம்

டெல்லியில் நடந்த தேச ஒற்றுமை ஓட்டத்தை தொடங்கி வைத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய காட்சி : படம் ஏஎன்ஐ
டெல்லியில் நடந்த தேச ஒற்றுமை ஓட்டத்தை தொடங்கி வைத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய காட்சி : படம் ஏஎன்ஐ
Updated on
2 min read

புதுடெல்லி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370, 35ஏ பிரிவை நீக்கியதன் மூலம் தீவிரவாதத்தின் நுழைவு வாயிலைப் பிரதமர் மோடி மூடியுள்ளார். படேலின் கனவு நனவாகியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதமாகத் தெரிவித்தார்.

சர்தார் வல்லபாய் படேலின் 144-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை தேச ஒற்றுமை நாளாக கடந்த 2014-ம் ஆண்டு முதல் அரசு கொண்டாடி வருகிறது. இதையொட்டி இன்று டெல்லி ஒற்றுமைக்கான ஓட்டம் நடத்தப்பட்டது.

டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் அரங்கில் இதுதொடர்பான நிகழ்ச்சி நடந்தது. விளையாட்டு வீரர்கள், போலீஸார், பொதுமக்கள் ஏன ஏராளமானோர் இதில் பங்கேற்றார்கள். இந்தியா கேட் முதல் ஷா ஜஹான் சாலை வரை 1.5 கி.மீ. வரை நடக்கும் இந்த ஓட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு படேலின் படம் அச்சிடப்பட்ட டி ஷர்ட் வழங்கப்பட்டது.

இந்த ஓட்டத்தை உள்துறை அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான அமித் ஷா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் ரமேஷ் பொக்ரியால், ஹர்திப்சிங் பூரி, ஆர்.கே.சிங், கிரண் ரிஜிஜூ, ஜி.கிஷன் ரெட்டி, டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜல், உள்துறைச் செயலாளர் அஜெய் கே. பல்லா ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

''தேசத்தோடு ஜம்மு காஷ்மீரை ஒருங்கிணைக்க வேண்டும் எனும் சர்தார் வல்லபாய் படேலின் கனவு நிறைவடையாமல் இருந்து வந்தது. ஆனால், அரசியலமைப்பு 370, 35ஏ பிரிவுகளை நீக்கியபின் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி நிறைவேறியது.

ஜம்மு காஷ்மீரில் இருந்த அரசியலமைப்பு 370, 35ஏ ஆகியவை தீவிரவாதத்தின் வாயிற்கதவுகளாக இருந்து வந்தன. அந்த பிரிவுகளைப் பிரதமர் மோடி நீக்கி தீவிரவாதத்தின் கதவுகளை மூடியுள்ளார்.

சுதந்திரம் அடைந்தபோது, 550 சிறிய சமஸ்தானங்களாக இந்தியா சிதறிக் கிடந்தது. சுதந்திரம் அடைந்தவுடன் நாடு சிதறிப்போகும் என்று ஒவ்வொருவரும் எதிர்பார்த்தார்கள்.

ஆனால், படேல் மீது காந்தி நம்பிக்கை வைத்து, அனைத்து சமஸ்தானங்களையும் ஒருங்கிணைக்கும் பணியை அளித்தார். அதன்படி சர்தார் படேல் சிதறுண்டு கிடக்கும் பகுதிகளை ஒருங்கிணைத்து தேசத்தை ஒருங்கிணைத்தார். ஆனால், அனைத்து சமஸ்தானங்களும் ஒருங்கிணைந்தாலும், ஜம்மு காஷ்மீர் மட்டும் இந்தியாவுடன் முழுமையாக இணைக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்தியாவுடன் முழுமையாக இணைக்க அரசியலமைப்புப் பிரிவு 370, 35ஏ பெரும் தடையாக இருந்தது. இந்த இரு விஷயங்களைக் கடந்த காலங்களில் ஆண்ட அரசுகள் கண்டுகொள்ளவில்லை. நிறைவேற்றப்படாத சர்தார் வல்லபாய் படேலின் கனவு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. அரசியலமைப்பின் இரு பிரிவுகளும் நீக்கப்பட்டு, தேசத்தோடு ஜம்மு காஷ்மீர் முழுமையாக ஒருங்கிணைந்தது.

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கும் மக்கள் அளித்த மிகப்பெரிய ஆதரவுக்குப் பின், 370 பிரிவு, 35ஏ பிரிவுகள் நீக்கும் முடிவு எடுக்கப்பட்டது.

பல ஆண்டுகளாக சர்தார் படேலின் கனவுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை. அவரின் முயற்சிகள் மறக்கப்பட்டன. அவருக்கு பாரத ரத்னாகூட வழங்கப்படவில்லை. முறையான சிலை இல்லை. அவரின் சிலையை வைக்கவும் அனுமதிக்கப்படவில்லை.

ஆனால், குஜராத் முதல்வராக மோடி வந்தபின், படேலுக்கு மரியாதை செய்யும் பணிகளைத் தொடங்கினார். விவசாயிகளிடம் இருந்து இரும்புகளைச் சேகரித்தார். குஜராத்தின் ஒவ்வொரு கிராமத்திலிருந்து மண்ணைச் சேகரித்து, பல்வேறு நதிகளிலிருந்து நீரைச் சேகரித்து இந்தச் சிலையை எழுப்பினார்

இந்திய வரைபடம் ஒருங்கிணைந்து இருப்பதை இன்று பார்க்கிறோம். அதற்கு முக்கியக் காரணம் சர்தார் வல்லபாய் படேல்தான். 550க்கும் மேற்பட்ட சிற்றரசுகளை ஒருங்கிணைத்து இந்திய தேசமாக மாற்றினார்''.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.

பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in