பசுக்களை கொல்வதற்காக கொண்டு சென்றதற்கான ஆதாரங்கள் இல்லை - பெலு கான், 2 மகன்கள், ஓட்டுநர் மீதான வழக்கு தள்ளுபடி

பசுக்களை கொல்வதற்காக கொண்டு சென்றதற்கான ஆதாரங்கள் இல்லை - பெலு கான், 2 மகன்கள், ஓட்டுநர் மீதான வழக்கு தள்ளுபடி
Updated on
1 min read

ஜெய்பூர், பிடிஐ

பசுப்பாதுகாவலர்கள் தாக்குதலுக்கு ஆளான பெலு கான் ஏப்ரல் 2017-ல் மரணமடைந்தார். புதனன்று, இவர், இவரது 2 மகன்கள், வாகன ஓட்டுநர் ஆகியோர் மீதான கால்நடைக் கடத்தல் வழக்கை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி பங்கஜ் பண்டாரி என்ற நீதிபதியின் முன் வந்த இந்த வழக்கு விசாரணையின்போது, பசுக்களை கொல்வதற்காக கடத்தியதாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கபில் குப்தா, இந்தக் குற்றவழக்கு வெறும் துஷ்பிரயோகம் தவிர வேறில்லை. பசுக்கள் சட்ட விரோதமாகக் கடத்தப்பட்டு கொல்லப்படுவதற்காக எடுத்துச் செல்லப்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு ஒருவித ஆதாரமும் இல்லை என்றும் மருத்துவ நிபுணர்களும் இது ஒரு மாதமே ஆன பசுங்கன்றுகள் மற்றும் சில பசுக்கள் என்றும் கூறியுள்ளனர் என்றும் இன்னும் சொல்லப்போனால் பசுக்களையும் கன்றுகளையும் வளர்ப்பதற்காக வாங்கிச் சென்றதாக இவர்களுக்கு விற்ற விற்பனையாளர் ரசீதே கூறுகிறது என்றார்.

இந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து பெலு கானின் மகன் இர்ஷத் கான், பிடிஐ செய்தி ஏஜென்சிக்குக் கூறும்போது, “உயர் நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. நாங்கள் பசுக்களை கொல்வதற்காகக் கொண்டு செல்லவில்லை. ஆனாலும் தாக்கப்பட்டோம், இன்று நீதி கிடைத்தது” என்றார்.

ஏப்ரல் 1, 2017 அன்று அல்வார் மாவட்டம் பெரூர் அருகே பெலு கான் வாகனம் இடைமறிக்கப்பட்டு கும்பல் ஒன்று தாக்கியதில் பெலு கான் பலியானதாக வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று குற்றம்சாட்டப்பட்ட 6 பேர்களும் ஆகஸ்ட் 14ம் தேதி விடுவிக்கப்பட்டனர். இவர்களை விடுவித்ததை எதிர்த்து ராஜஸ்தான் அரசு அப்பீல் செய்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in