

மும்பை
மகாராஷ்டிராவில் பாஜக -சிவசேனா இடையே கூட்டணி அரசு அமைப்பது தொடர்பாக குழப்பம் நிலவி வரும் நிலையில் மோதலை முடிவுக்கு கொண்டு வரும்வகையில் சிவசேனாவுக்கு பாஜக தரப்பில் 3 வாய்ப்புகள் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த 21-ம் தேதி தேர்தலும் 24-ம் தேதி வாக்குகளும் எண்ணப்பட்டன. இதில் சிவசேனா கட்சிக்கு 56 இடங்களும், பாஜகவுக்கு 105 இடங்களும் கிடைத்தன.
ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை. ஆனால், பாஜகவிடம் தற்போது 105 இடங்கள் மட்டுமே இருப்பதால் சிவசேனா ஆதரவோடுதான் ஆட்சி அமைக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. ஆனால் ஆட்சியில் சமபங்கு வேண்டும் என சிவசேனா வலியுறுத்துகிறது. இதனால் மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இந்தநிலையில் மகாராஷ்டிர மாநில பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக சட்டப்பேரவை கட்சித் தலைவராக பட்னாவிஸ் முறைப்படி தேர்வு செய்யப்பட்டார்.
வாய்ப்பு 1: இதன்படி சிவசேனாவுக்கு மத்திய அமைச்சரவையில் 2 அமைச்சர்கள் பதவி கூடுதலாக வழங்கப்படலாம். இதனை ஏற்றுக் கொண்டால் மத்திய அமைச்சரவை உடனடியாக விஸ்வரிக்கப்பட்டு சிவசேனாவைச் சேர்ந்த 2 பேர் மத்திய அமைச்சர்கள் ஆக்கப்படலாம்.
வாய்ப்பு 2: இதன்படி சிவசேனாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம். ஹரியாணாவில் துஷ்யந்த் சவுதாலா துணை முதல்வரானது போல, மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே அல்லது அந்த கட்சியைச் சேர்ந்த வேறு ஒருவர் துணை முதல்வராக்கப்படலாம்.
வாய்ப்பு 3: இதன்படி மகாராஷ்டிர மாநில அமைச்சரவையில் கூடுதலாக சில அமைச்சர் பதவி அல்லது முக்கிய துறைகள் சிவசேனா தரப்புக்கு வழங்கப்படலாம்.
சிவசேனா தலைவர்களுடன் பாஜக தலைவர்கள் பேசும்போது இந்த 3 வாய்ப்புகளை முன் வைப்பார்கள் என்றும், சிவசேனாவின் முடிவை பொறுத்து பாஜக விட்டுக்கொடுக்கும் என அக்கட்சி மூத்த தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த 3 வாய்ப்புகளில் ஒன்றை சிவசேனா ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் கடந்த 5 ஆண்டுகளை போலவே பாஜக கூட்டணி அரசு நடைபெறும். அதேசமயம் முதல்வர் பதவியில் மாற்றம் ஏதும் இல்லை என்பதில் பாஜக உறுதியுடன் இருப்பதாக கூறப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கும் தேவேந்திர பட்னவிஸ் தான் முதல்வர் என பாஜக தலைமை தெளிவாக தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
ஐஏஎன்எஸ்