

புதுடெல்லி,
பெண்ணின் சம்மதமின்றி உறவு நேரிட்டது என்றால் அந்தப் பெண் தான் சம்மதிக்கவில்லை என்று கூறிவிட்டால் அதைத்தான் நீதிமன்றம் ஏற்கும் என்றும் பலாத்காரம் நடந்துள்ளது என்றே நீதிமன்றம் முடிவு செய்யும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிங்க் இந்தித் திரைப்படத்திலும் அதன் தமிழ் ரீ-மேக் ஆன நேர் கொண்ட பார்வையிலும் வருவது போல் பெண் நோ என்றால் அது நோ -தான் என்று உச்ச நீதிமன்றமும் சூசகமாகத் தெரிவித்துள்ளது.
சமீபத்திய வழக்கின் தீர்ப்பு ஒன்றில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான யு.யு.லலித், இந்து மல்ஹோத்ரா, சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு கூறிய போது, “1872-ம் ஆண்டு இந்திய சாட்சிய சட்டத்தின் 114-ஏ பிரிவின் படி சம்மதமின்மை என்பதையே பலாத்காரம் நடந்தது என்று ஆராயாமல் கூட ஏற்று கொள்ள வழிவகை செய்கிறது. அதாவது குற்றம்சாட்டப்பட்டவர் சம்பந்தப்பட்ட பெண்ணுடன் பாலியல் ரீதியான உறவு வைத்துக் கொண்டதாக நிரூபிக்கப்படும் பட்சத்தில் பெண்ணின் சம்மதம் இருந்ததா அல்லது இல்லையா என்ற கேள்வி எழும்போது பாதிக்கப்பட்டதாகக் கூறும் அந்தப் பெண் தான் சம்மதிக்கவில்லை என்று கூறினாலே குற்றம்சாட்டப்பட்டவர் பலாத்காரம் செய்ததாகவே கோர்ட் பார்க்க முடியும் என்பதை இந்த சட்டப்பிரிவு தெளிவுபடுத்துகிறது” என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
அதாவது தன் சம்மதமில்லாமல்தான் பாலியல் உறவு நடந்தது என்று புகார்தாரரான பாதிக்கப்பட்ட பெண் கோர்ட்டில் தெரிவித்தாலே அது பலாத்காரம் என்பதாகவே கோர்ட் ஆராயமலேயே ஏற்றுக் கொள்ள இந்தப் பிரிவு வழிவகை செய்கிறது.
பணியிடத்தில் எழுந்த ஒரு பாலியல் பலாத்காரப் புகாரில் பெண் ஒருவர் தன்னை வேலைக்கு அமர்த்தியவர் தன்னை தன் சம்மதமின்றி பலமுறை பலாத்காரம் செய்தார் என்று தொடர்ந்த வழக்கு ஒன்றின் விசாரணையில் நீதிபதிகள் இவ்வாறு தெரிவித்தனர். ஆபாசப் படங்களையும் எடுத்து அந்த நபர் பெண்ணை மிரட்டியுள்ளார், இன்னும் ஒரு படிமேலே பெண்ணுக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயம் ஆகிய வேளையிலும் நிச்சயம் செய்யப்பட்டவருக்கும் சில படங்களை அனுப்பியுள்ளார் குற்றம்சாட்டப்பட்டவர். கடைசியாக அந்தப் பெண் புகார் அளிக்க பலாத்கார வழக்கு தொடரப்பட்டது.
ஆனால் பெரிய தொகை மூலம் சம்பந்தப்பட்ட இருவரும் ‘செட்டில்மெண்ட்’ செய்து கொண்டதாக குஜராத் உயர் நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தது. ஆனால் அந்த ‘செட்டில்மெண்ட்’ தன்னை மிரட்டி மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆவணம் மட்டுமே என்று அந்தப் பெண் உச்ச நீதிமன்றத்தை நாடினார். உயர் நீதிமன்றம் ‘அதான் செட்டில்மெண்ட் ஆகிவிட்டதே பிறகென்ன?’ என்று வழக்கை விட்டு விட்டது, ஆனால் செட்டில்மெண்ட்டையும் விசாரிக்க வேண்டியது கடமையாகும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
செட்டில்மெண்டும் விசாரிக்கப்பட வேண்டும், நிச்சயம் செய்யப்பட்டவரை அழைத்ததையும் விசாரிக்க வேண்டும். விசாரணை நீதிமன்ற சட்ட நடைமுறைகளை உயர் நீதிமன்றம் கண்டுகொள்ளாமல் வழக்கை ரத்து செய்துள்ளது என்று உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. இதனையடுத்து வழக்கின் தகுதி நிலவரங்கள் பற்றியெல்லாம் யோசிக்காமல், குற்றம்சாட்டப்பட்டவர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-தி இந்து ஆங்கிலம்