

புது டெல்லி,
பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நாளை இந்தியா வர உள்ளதாக இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் தெரிவித்தார்.
ஏஞ்சலா மெர்கெலின் வருகையின்போது இந்தியாவும் ஜெர்மனியும் சுமார் 20 ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
மெர்கெலின் இரண்டு நாள் இந்தியப் பயணத்தைப் பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெர்மன் தூதர் வால்டர் ஜே லிண்ட்னர் விரிவாகக் கூறினார்.
இதுகுறித்து லிண்ட்னர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''இந்தியாவும் ஜெர்மனியும் மிக நீண்டகால உறவைக் கொண்டுள்ளன. மேலும் இரு நாடுகளுக்கு இடையில் பல்வேறு பகுதிகளில் ஒத்துழைப்பை மேலும் வளர்ப்பதற்கான பெரும் சாத்தியம் உள்ளது.
இரு தலைவர்களும் காஷ்மீர் பிரச்சினை உள்ளிட்ட எந்தவொரு பிரச்சினையையும் பற்றிப் பேசலாம்.
ஐரோப்பிய ஒன்றிய எம்.பி.க்கள் காஷ்மீருக்குப் பயணம் செய்தது தனியார் ஏற்பாடு என்று ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கெனவே கூறியுள்ளது. அதுவே எங்கள் நிலைப்பாடும்கூட. அவர்கள் இந்தியாவுக்கு வருகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. இதில் உங்களுக்கு என்ன தெரியுமோ அதுதான் எனக்கும் தெரியும்.
மெர்கெல் நாளை (வியாழக்கிழமை) மாலை டெல்லியில் தரையிறங்குகிறார். அவருடன் 12 அமைச்சகங்களின் தூதுக்குழுவும் வருகின்றன. அமைச்சர்களின் பிரதிநிதிகள் தங்கள் இந்திய சகாக்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார்கள்.
விவாதங்களின் தலைப்புகளில் செயற்கை நுண்ணறிவு, நிலையான வளர்ச்சி, நகர்ப்புற இயக்கம், விவசாயம் மற்றும் கால்பந்து ஆகியவை அடங்கும்.
இந்தப் பயணத்தின்போது சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய இந்தியப் பெண் பிரமுகர்களுடன் மெர்கெல் உரையாடுவார். அவர் சந்திக்க விரும்பும் பெண் ஆளுமைகளின் பட்டியலில் வழக்கறிஞர்கள், பதிவர்கள் மற்றும் தொழில்முனைவோர் எனப் பலரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தியத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதைத் தவிர, சனிக்கிழமையன்று விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன்பு குர்கானில் உள்ள ஒரு ஜெர்மன் நிறுவனம் மற்றும் ஒரு மெட்ரோ ரயில் நிலையத்தையும் மெர்கெல் பார்வையிடுவார்''.
இவ்வாறு லிண்ட்னர் தெரிவித்தார்.