

மும்பை
மகாராஷ்டிர மக்கள் நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமருவதற்காகவே வாக்களித்துள்ளனர், ஆனால் சூழ்நிலை மாறினால் அப்போது நாங்கள் யோசிப்போம் என தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் படேல் கூறினார்.
மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த 21-ம் தேதி தேர்தலும் 24-ம் தேதி வாக்குகளும் எண்ணப்பட்டன. இதில் சிவசேனா கட்சிக்கு 56 இடங்களும், பாஜகவுக்கு 105 இடங்களும் கிடைத்தன.
ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை. ஆனால், பாஜகவிடம் தற்போது 105 இடங்கள் மட்டுமே இருப்பதால் சிவசேனா ஆதரவோடுதான் ஆட்சி அமைக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. ஆனால் ஆட்சியில் சமபங்கு வேண்டும் என சிவசேனா வலியுறுத்துகிறது. இதனால் மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
மகாராஷ்டிர மாநில பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் மும்பையில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பாஜக சட்டப்பேரவை கட்சித் தலைவராக பட்னாவிஸ் முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார். இந்தநிலையில் மகாராஷ்டிராவில் நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் படேல் கூறியதாவது:
‘‘மகாராஷ்டிர மக்கள் நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமருவதற்காகவே வாக்களித்துள்ளனர். நாங்களும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து மக்களுக்காக குரல் கொடுப்போம். இப்போதைய நிலவரத்தை பொறுத்தவரையில் எங்களது முடிவு இதுதான். ஆனால் சூழ்நிலை மாறினால் அப்போது நாங்கள் யோசிப்போம். எனவே என்ன நடக்கிறது என உன்னிப்பாக கவனித்து வருகிறோம்’’ எனக் கூறினார்.