

புதுடெல்லி
டெல்லியில் ஆம் ஆத்மி அரசு அறிமுகம் செய்துள்ள அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கான இலவசப் பயணத் திட்டம் குறித்துக் கருத்துகளைக் கேட்டறிய முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று பேருந்தில் பயணித்தார்.
பேருந்தில் பயணம் செய்த கேஜ்ரிவால், பெண்களிடம் திட்டத்துக்கான வரவேற்பு குறித்தும், குறை -நிறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
டெல்லியில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கும் திட்டத்தை முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடந்த ஜூன் மாதம் அறிவித்தார். ஆனால், மெட்ரோ ரயிலில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த கால அவகாசம் தேவைப்பட்டதால், பேருந்துகளில் மட்டும் பெண்கள் இலவசமாகப் பயணிக்கும் திட்டத்தை முதல்வர் கேஜ்ரிவால் இன்று தொடங்கி வைத்தார்.
டெல்லியில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும் நோக்கில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான கேஜ்ரிவால் இலவசத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
இந்நிலையில், இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட இரு நாட்களில் 18 லட்சம் பெண்கள் பேருந்தில் இலவசமாகப் பயணித்துள்ளார்கள் என்று டெல்லி போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. முதல் நாளான நேற்று 13.66 லட்சம் பெண்களும், இன்று 4.55 லட்சம் பெண்களும் பயணித்துள்ளனர்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ட்விட்டரில் தனது பேருந்துப் பயணம் குறித்துக் குறிப்பிடுகையில், " இலவசப் பயணம் குறித்து பெண்களிடம் கருத்துகளைக் கேட்டறிய சில பேருந்துகளில் இன்று நான் பயணித்தேன். மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள், கடைகளுக்குச் செல்லும் பெண்களிடமும் கருத்துகளைக் கேட்டேன்.
மருத்துவமனைக்கு நாள்தோறும் செல்லும் சில பெண்களையும் சந்தித்துப் பேசினேன். அனைவரும் இந்தத் திட்டத்துக்கு மகிழ்ச்சியும், வரவேற்பும் தெரிவித்துள்ளார்கள். ஆம் ஆத்மி அரசு சார்பில் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாவலர்கள், நிச்சயம் ஈவ்-டீஸிங் செய்யும் செய்பவர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஓடும் 5,600 அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம். இதற்காக ஆம் ஆத்மி அரசு ரூ.140 கோடியை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இலவசப் பயணத்தை மேற்கொள்ளும் பெண்கள் பேருந்து நிறுத்தங்களில் தரப்படும் பிங்க் டிக்கெட்டைப் பெற்றுக்கொண்டு பயணிக்கலாம்.
பிடிஐ