

புதுடெல்லி
நாட்டின் பொருளாதாரச் சரிவு குறித்து மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டுக்கு திடீரென புறப்பட்டுச் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறுகையில், " ராகுல் காந்தி திங்கள்கிழமை இரவு வெளிநாடு புறப்பட்டார். ஒருவாரம் வரை அவரின் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் தாயகம் திரும்பும் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி மத்திய அரசுக்கு எதிராக நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பார்" எனத் தெரிவிக்கின்றன.
ராகுல் காந்தி எந்த நாட்டுக்கு சென்றுள்ளார் என்று அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், ராகுல் காந்தி இந்தோனேசியா சென்றுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் பொருளாதாரச் சூழல் மந்தமாகி வருவது, பொருளாதார வளர்ச்சிக் குறைவு, தொழில்துறை, ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை ஆகியவற்றைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்த உள்ளது.
நவம்பர் 1-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நாட்டின் பொருளாதாரச் சூழல், வளர்ச்சிக் குறைவு ஆகியவை குறித்து 35 நிருபர்கள் சந்திப்பு நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. நவம்பர் 5-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நாட்டின் பொருளாதாரச் சூழல் குறித்து காங்கிரஸ் கட்சி போராட்டமும் நடத்த உள்ளது. இந்த 5-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடக்கும் போராட்டங்களில் மூத்த தலைவர்கள் பங்கேற்று நாட்டின் பொருளாதாரச் சூழல் குறித்துப் பேசுவார்கள்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநிலங்களில் இருந்து மாவட்டத் தலைவர்கள் முதல் மாநிலத் தலைவர்கள் வரைக்கும் காங்கிரஸ் தலைமை அழைப்பு விடுத்துள்ளது. மேலும், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்தபோது, ராகுல் காந்தி கம்போடியா புறப்பட்டுச் சென்றார்.
காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் அமைதியற்ற சூழல், குழப்பமான சூழல் ஆகியவற்றைச் சமாளிக்கும் நோக்கில் ஆழ்நிலை தியானப் பயிற்சிக்காக கம்போடியாவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சென்றுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், உண்மை நிலவரத்தைத் தெரிவிக்க மறுத்த நிர்வாகிகள், ராகுல் காந்தியின் தனிப்பட்ட பயணம் என்று தெரிவித்தார்கள்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், கட்சியின் முக்கியப் பொறுப்பிலும் நட்சத்திரப் பிரச்சாரப் பட்டியலில் இருப்பவர் ராகுல் காந்தி. இரு மாநிலத் தேர்தல் நடக்கும் தருவாயில் திடீரென ராகுல் காந்தி வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொண்டிருப்பது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த 2017-ம் ஆண்டு நடந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல், அதன்பின் கடந்த ஆண்டு நடந்த மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய தேர்தலில் ராகுல் காந்தி தன்னை முன்னிறுத்தி ஆர்வமாக, மிகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். ஒவ்வொரு பிரச்சாரக் கூட்டத்திலும் ராகுல் காந்தியின் பேச்சு கவனிக்கப்பட்டது, ஈர்க்கப்பட்டது. அதுபோல் மகாராஷ்டிரா, ஹரியாணாவுக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தாலும் அது முன்பு இருந்ததைப் போல் வலுவானதாக அமையவில்லை என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாகும்.
ராகுல் காந்தியின் நெருக்கமான தலைவர்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகுவதும், அல்லது மூத்த தலைவர்கள் மீது குற்றம் சாட்டும் சம்பவங்கள் போன்றவற்றாலும், மனம் வெறுத்து தனது அதிருப்தியைத்தான் ராகுல் காந்தி இப்படி வெளிநாட்டுப் பயணத்தின் மூலம் உணர்த்துகிறாரா என்ற கேள்வி எழுகிறது.
ஏஎன்ஐ