போலி கல்விச் சான்றிதழ்: மேலும் ஒரு ஆம் ஆத்மி எம்எல்ஏ மீதான புகார் விசாரணைக்கு ஏற்பு

போலி கல்விச் சான்றிதழ்: மேலும் ஒரு ஆம் ஆத்மி எம்எல்ஏ மீதான புகார் விசாரணைக்கு ஏற்பு
Updated on
1 min read

டெல்லி சட்ட அமைச்சர் ஜிதேந்தர் சிங் தோமருக்குப் பிறகு மேலும் ஒரு ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ மீதான போலி கல்விச் சான்றிதழ் புகாரை நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி பாலம் தொகுதி எம்எல்ஏ பாவ்னா கவுர். இவர் 2013 மற்றும் 2015-ம் ஆண்டின் டெல்லி சட்டப்பேரவை தேர்தல்களில் கல்வித் தகுதி பற்றி வெவ்வேறு தகவல்களை அளித்துள்ளதாக சமரேந்திர நாத் வர்மா என்பவர் டெல்லி மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவர் தனது மனுவில், “டெல்லியில் 2013-ல் நடந்த பேரவைத் தேர்தலில் பாவ்னா கவுர் தனது அதிகபட்ச கல்வித் தகுதி பிளஸ் 2 என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் 2015-ல் நடந்த தேர்தலில் தனது கல்வித் தகுதி பி.ஏ., பி.எட் என்று கூறியுள்ளார். இரு தேர்தல்களும் 14 மாத இடைவெளியில் நடந்துள்ளன. இந்நிலையில் 5 ஆண்டுகளுக்கான படிப்பை இந்த குறுகிய காலத்தில் முடித்திருக்க முடியாது. எனவே இரண்டில் ஒரு தகவல் தவறாக இருக்க வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125ஏ-ன் படி இது 6 மாத சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ள குற்றம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் பங்கஜ் சர்மா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக கூறிய நீதிபதி, அடுத்த விசாரணை வரும் 25-ம் தேதி நடைபெறும் என்றார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in