7.5 கிலோ எடை குறைந்து பலவீனமான சிதம்பரம்: குடல் அழற்சி நோயால் அவதி: அமலாக்கப்பிரிவு காவல் இன்று முடிவு 

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ப.சிதம்பரம்
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ப.சிதம்பரம்
Updated on
2 min read

புதுடெல்லி

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கப்பிரிவு காவலில் இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் குடல் அழற்சி(chronic Crohn’s disease) நோயால் அவதிப்பட்டு 7.5 கிலோ எடை குறைந்துள்ளார்.

அமலாக்கப்பிரிவு காவல் இன்றுடன் முடிவடைவதால், இன்று பிற்பகலில் சிறப்பு நீதிமன்றத்தில் சிதம்பரம் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிகிறது.

கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்ட சிதம்பரம் இதுவரை 4 முறை சிறையிலிருந்தவாறு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளார். சிறைக்குச் செல்லும்போது 73.5 கிலோ இருந்த சிதம்பரம், தற்போது 7.5 கிலோ எடை குறைந்து 66 கிலோவாக பலவீனமாக இருக்கிறார் என்று சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிதம்பரத்துக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், " சிதம்பரத்துக்கு உடனடியாக பன்முக சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவது அவசியம், அவரின் உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது" என்று தெரிவித்தனர்.

ப.சிதம்பரத்துக்கு ஏற்பட்டுள்ள குடல் அழற்சி நோயால் அவரின் ஜீரண உறுப்புகளில் கடுமையான புண் ஏற்பட்டுள்ளது. வாய் முதல் குடல் வரை கடுமையான புண் ஏற்பட்டுள்ளதால், அடிவயிறு வலி, கடும் வயிற்றுப்போக்கு, எடை குறைதல் போன்ற குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன.

சிதம்பரத்துக்குத் தொடக்கத்தில் வீட்டு உணவு வழங்க மறுத்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், அவருக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக்குறைவு, உடல் கோளாறு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்தபின்தான் வீட்டிலிருந்து உணவு வழங்கக் கடந்த 3-ம் தேதி சம்மதித்தது. ப.சிதம்பரத்துக்கு ஏற்கனவே குடல் அழற்சி நோய் இருந்துவந்தது.

இந்த நோய்க்கு ஹைதராபாத்தில் சிதம்பரம் சிகிச்சை எடுத்தபின் அந்த நோய் ஓரளவுக்குக் குணமானாலும், தொடர்ந்து மருந்துகள் எடுத்துவந்தார். ஆனால், திஹார் சிறையில் அடைக்கப்பட்டபின் அவருக்கு இருந்த குடல் அழற்சி நோய் தீவிரமாகியுள்ளது.

முதலில் கடந்த 7-ம் தேதி குடல் அழற்சி காரணமாகச் சிறையிலிருந்தவாறு மருத்துவமனைக்கு சென்ற சிதம்பரம், அதன்பின் 23ம் தேதியும், 25-ம் தேதியும் சென்றார். அதன்பின் டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கும், பின், எய்ம்ஸ் மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காகச் சிதம்பரம் அழைத்துச்செல்லப்பட்டு பின் சிறைக்குத் திரும்பினார்

கடந்த 24-ம் தேதி சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தனக்கு ஏற்பட்ட குடல் அழற்சி நோய்க்கு ஹைதராபாத்தில் சிகிச்சை எடுக்க வேண்டும் என்பதால், இரு நாட்கள் இடைக்கால பெயில் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், இந்த வேண்டுகோளை நிராகரித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பரிந்துரைத்தது.

இந்த சூழலில் அமலாக்கப்பிரிவு காவல் சிதம்பரத்துக்கு இன்றுடன்(அக்.30ம்) முடிவதால் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

ஐஏஎன்எஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in