

ஸ்ரீநகர்
காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 6 தொழிலாளர்களைத் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். சுட்டுக் கொல்லப்பட்ட 6 தொழிலாளர்களும் மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கள நிலவரத்தை ஆய்வு செய்ய ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 23 எம்.பி.க்கள் முகாமிட்டுள்ள நிலையில், தீவிரவாதிகள் இந்த 6 தொழிலாளர்களையும் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று இரவு 7.30 மணி அளவில் குல்காம் மாவட்டம், கட்ருஸ் பகுதியில் நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து குல்காம் போலீஸ் துணை ஆணையர் சவுகத் அஜிஸ் கூறுகையில், "கட்டிட வேலை மற்றும் தச்சுவேலைப் பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 6 தொழிலாளர்களைத் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்துள்ளார்கள். இதில் ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு ஸ்ரீநகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்" எனத் தெரிவித்தார்.
சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் கம்ருதீன், முர்ஸ்லீன் ஷேக், ரபிக் இல் ஷேக், ரபிக் ஷேக், சாதிக் உல் ஷேக், நயாம் உத்தீன் ஷேக் ஆகியோர் என அடையாளம் தெரிந்தது. இவர்கள் அனைவரும் மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கி கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது.
சிறப்பு அந்தஸ்து நீக்கியபின், காஷ்மீர் மாநிலத்துக்குள் வரும் வெளிமாநில மக்களைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கி வருகின்றனர். இதுவரை காஷ்மீர் அல்லாத வெளிமாநிலங்களைச் சேர்ந்த 11 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் லாரி டிரைவர்கள், கிளீனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 24-ம் தேதி சோபியான் மாவட்டத்தில் இரு லாரி டிரைவர்களை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். கடந்த திங்கள்கிழமை, உத்தம்பூர் மாவட்டம் அனந்த்காக் பகுதியில் ஒரு லாரி டிரைவரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 4 லாரி டிரைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு குறித்து அறிந்ததும் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்தனர். ஆனால் தீவிரவாதிகள் தப்பி ஓடினர். இதையடுத்து, அந்தப் பகுதி முழுவதும் தீவிரப் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தின் கள நிலவரத்தை ஆய்வு செய்ய ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் 23 பேர் முகாமிட்டுள்ள நிலையில் நேற்று ஸ்ரீநகரின் பல்வேறு பகுதிகளில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 4 பேர் காயமடைந்தனர். கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, போக்குவரத்தும் முடங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐஏஎன்எஸ்