

புதுடெல்லி,
டெல்லியில் பெண்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இலவச பேருந்துப் பயணம், வரும்காலங்களில் மாணவர்களுக்கும், முதியோருக்கும் நீட்டிக்கப்படும் என்று டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் உறுதியளித்தார்.
டெல்லியில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கும் திட்டத்தை முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடந்த ஜூன் மாதம் அறிவித்தார்.
ஆனால் மெட்ரோ ரயிலில் இந்த திட்டத்தைச் செயல்படுத்து கால அவகாசம் தேவைப்பட்டதை, பேருந்துகளில் மட்டும் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டத்தை முதல்வர் கேஜ்ரிவால் இன்று தொடங்கிவைத்தார்.
டெல்லியில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும் நோக்கில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான கேஜ்ரிவால் இலவசத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
இந்நிலையில் பேருந்துகளில் இலவசமாகப் பெண்கள் பயணிக்கும் திட்டத்தை அறிமுகம் செய்துவைத்து, முதல்வர் கேஜ்ரிவால் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
அரசுப்பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கும் இந்த திட்டத்தின் மூலம் சமூகத்தில் ஆண்-பெண் இடையிலான பாகுபாடு இடைவெளி குறையும், பாலமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
அதிகமான போக்குவரத்து கட்டணம் காரணமாக பள்ளி, கல்லூரி படிப்பைப் பாதியிலேயே நிறுத்திய மாணவிகள் இனிமேல் தொடரலாம், எந்த காரணத்தைக் கொண்டும் கல்வியைத் தியாகம் செய்ய வேண்டாம். எங்கு வீடு இருந்தாலும் பள்ளி, கல்லூரிக்கு இலவசமாகவே செல்லலாம். அதேபோல அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களும் இலவசமாகப் பேருந்துகளில் பயணிக்க முடியும்.
இந்த திட்டத்துக்குப் பெண்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பு, வெற்றி ஆகியவற்றின் அடிப்படையில் அடுத்த கட்டமாக மாணவர்களுக்கும், முதியோருக்கும் இலவசப் பயணம் நீட்டிக்கப்படும்.
நாங்கள் இந்த திட்டத்தைக் கட்சிக்கு அப்பாற்பட்டுச் செய்கிறோம், குடிமக்களுக்குத் தரமான வசதிகள் கிடைக்கவே உறுதி செய்கிறோம்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கூறியதைப் போன்று மக்களுக்கு அரசு 100 ரூபாய் செலவு செய்தால் 85 ரூபாய் ஊழலுக்கும், 15 ரூபாய் மட்டுமே மக்களுக்கும் செல்கிறது என்றார். ஆனால் நாங்கள் 85 ரூபாயை ஊழல் இல்லாமல் சேமித்து அதை மக்களுக்குச் செலவு செய்கிறோம்.
மக்களின் நலனுக்காக நானும், எனது அரசும் பணியாற்றுவதால் எதிர்க்கட்சிகளுக்கு என்ன பிரச்சினை. இந்த விஷயத்தை அரசியல் கடந்து பார்க்க வேண்டும். பெண்களின் பாதுகாப்புக்காக அனைத்துப் பேருந்துகளிலும் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். .
தேசத்தின் பெண்கள் முன்னேற்றமடைந்தால் மட்டுமே தேசம் வளர்ச்சி அடையும். பேருந்துகளில் இலவச பயணம் அளிப்பது பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் மிகப்பெரிய நடவடிக்கையாக நினைக்கிறேன். இது ஒரு சகோதரனுடைய பரிசாக அளிக்கிறேன்.
இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்
பிடிஐ