

சண்டிகர்
மகாராஷ்டிராவில் துஷ்யந்த் இல்லை, அவரது தந்தை சிறையிலும் இல்லை என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் பேசியதற்கு ஹரியாணா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதலா கண்டனம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த 21-ம் தேதி தேர்தலும் 24-ம் தேதி வாக்குகளும் எண்ணப்பட்டன. இதில் சிவசேனா கட்சிக்கு 56 இடங்களும், பாஜகவுக்கு 105 இடங்களும் கிடைத்தன.
ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை. ஆனால், பாஜகவிடம் தற்போது 105 இடங்கள் மட்டுமே இருப்பதால் சிவசேனா ஆதரவோடுதான் ஆட்சி அமைக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. ஆனால் ஆட்சியில் சமபங்கு வேண்டும் என சிவசேனா வலியுறுத்துகிறது.
இதனால் மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்தநிலையில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவுத்திடம் கால தாமதம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஹரியாணாவில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அரசு அமைந்து விட்டநிலையில் மகாராஷ்டிராவில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அரசு பதவியேற்க தாமதம் ஏன் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அவர் பதில் அளிக்கையில்‘‘மகாராஷ்டிராவில் துஷ்யந்த் இல்லை, அவரது தந்தை சிறையிலும் இல்லை. அதனால் எங்களுக்கு அவசரம் இல்லை’’ என்றார்.
இதற்கு ஹரியாணாவில் பாஜகவின் கூட்டணி கட்சியான ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவரும் துணை முதல்வருமான துஷ்யந்த் சவுதாலா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘சஞ்சய் ரவுத் போன்ற மூத்த அரசியல்வாதிகள் இதுபோன்று பேசுவது கண்டிக்கத்தக்கது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
என்னை பற்றி சஞ்சய் ரவுத்துக்கு நன்றாகவே தெரியும். எனது தந்தை அஜய் சவுதாலா 6 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். தண்டனை காலம் முடிந்த பிறகு தான் அவர் வெளியே வருவார். அரசியலுக்கு இதற்கும் தொடர்பு படுத்துவது வேதனையளிக்கிறது’’ எனக் கூறினார்.