சிவசேனாவுக்கு ஆட்சியில் சமபங்கு அளிப்பதாக பாஜக வாக்குறுதி அளிக்கவில்லை: தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் மும்பையில் இன்று பேட்டி அளித்த காட்சி : படம் ஏஎன்ஐ
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் மும்பையில் இன்று பேட்டி அளித்த காட்சி : படம் ஏஎன்ஐ
Updated on
2 min read

மும்பை

மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு ஆட்சி அதிகாரத்தில் இரண்டரை ஆண்டுகள் பங்களிப்போம், முதல்வர் பதவி வழங்குவோம் என்று நாங்கள் வாக்குறுதி ஏதும் அளிக்கவில்லை என்று முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால், 50:50 ஆட்சி அதிகாரத்தில் சமபங்கு அளிக்கிறோம் என்று மக்களவைத் தேர்தலின் போது, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, தங்களிடம் வாக்களித்துள்ளார் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறி வரும் நிலையில், முதல்வர் பட்நாவிஸின் பேச்சு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த 21-ம் தேதி தேர்தலும் 24-ம் தேதி வாக்குகளும் எண்ணப்பட்டன. இதில் சிவசேனா கட்சிக்கு 56 இடங்களும், பாஜகவுக்கு 105 இடங்களும் கிடைத்தன.கடந்த 2014-ம் ஆண்டு சிவசேனாவுக்கு கிடைத்த இடங்களிலிருந்து 7 இடங்கள் குறைவாகவும், பாஜக பெற்ற இடங்களிலிருந்து 17 இடங்கள் குறைவாகவும் கிடைத்துள்ளன.

5 ஆண்டுகளில் இரண்டரை ஆண்டுகள் பாஜகவும், மீதமுள்ள இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவும் முதல்வர் பதவியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என உத்தவ் தாக்கரே கூறுகிறார். ஆனால், இப்போது முதல்வர் பதவியைப் பகிர்ந்து கொள்வதற்கு பாஜக தரப்பில் சம்மதம் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் இரு கட்சிகளும் சுயேட்சை எம்எல்ஏக்கள், சிறு கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கும் பணியில் இறங்கியுள்ளன. பாஜகவின் பக்கம் நேற்று 3 சுயேட்சை எம்எல்ஏக்கள் சேர்ந்துள்ள நிலையில், சிறு கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் இருவர் சிவசேனா பக்கம் சேர்ந்துள்ளனர்.

இதற்கிடையே நேற்று சிவசேனா தரப்பிலும், முதல்வர் பட்னாவிஸும் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை தனித்தனியே சந்தித்துப்பேசினார்கள். இந்த சந்திப்பில் பேசப்பட்ட விவரங்கள் ஏதும் வெளியாகாத நிலையில், அடுத்ததாக யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதில் பல்வேறு ஊகங்கள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன.

இந்த சூழலில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மும்பையில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், " சிவசேனாவுக்கு ஆட்சி அதிகாரத்தில் சமபங்கு அளிப்பதாக நாங்கள் வாக்குறுதி ஏதும் மக்களவைத் தேர்தல் கூட்டணி அமைக்கும்போது அளிக்கவில்லை.

அடுத்த 5 ஆண்டுக்கு நான்தான் முதல்வர். அடுத்த 5 ஆண்டுகளுக்கு பாஜக தலைமையிலான கூட்டணி அரசு நிலையான, திறமையான ஆட்சியை வழங்கும் என்று உறுதியளிக்கிறேன். பாஜகவின் சட்டப்பேரவைத் தலைவரைத் தேர்வு செய்யும் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

அடுத்த முதல்வர் யார் என்பதைப் பிரதமர் மோடி வெளிப்படையாகவே ஏற்கனவே அறிவித்துவிட்டார், ஆதலால், இந்த கூட்டம் ஒரு சம்பிரதாய முறைக்காகவே இருக்கும்" எனத் தெரிவித்தார்.

பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in