

புதுடெல்லி
வட இந்திய மாநிலங்களில் சகோதரிகள் பாசம் காட்டுவதற்கான பண்டிகையாக இருப்பது ‘பைய்யா தோஜ்’. இன்று கொண்டாடப்படும் இந்த நாள் முதல், டெல்லி முழுவதிலும் பேருந்தில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பெண்களுக்கு இலவசப்பயணம் அறிவித்துள்ளார்.
தம் சகோதரர்கள் மீது சகோதரிகள் பாசம் காட்டும் பண்டிகையான பைய்யா தோஜ் நாளில் பெண்கள் கூட்டம் பேருந்து மற்றும் ரயில்களில் அலைமோதுவது வழக்கம். இத்தினத்தில் ஆண்களை போல் பெண்களும் ரயில் மற்றும் பேருந்துகளின் கூரைகளிலும் ஏறி அமர்ந்து பயணம் செய்வது உண்டு.
இந்ததினத்தில் பெண்கள் தம் கணவருடன் இல்லாமல் பெரும்பாலும் தனியாகவே செல்கிறார்கள். அவர்களுடைய கணவன்மார்களின் சகோதரிகளும் சந்திக்க வருவது இதன் காரணம். ’ரக்ஷா பந்தன்’ எனும் பண்டிகையில் சகோதர்கள் தம் சகோதரிகளை தேடிச் செல்வதை போல், இது சகோதரிகள் தம் சகோதரர்களை சந்திக்கும் நிகழ்வாகும்.
இந்த சந்தர்பத்தில் டெல்லிவாழ் பெண்களுக்கு முதல் அமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி பெரிய சலூகை அளித்துள்ளது.டெல்லியில் இன்று முதல் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் அனைத்து பெண்களுக்கும் கட்டணம் இன்றி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் தனது அறிவிப்பில் கூறும்போது, ‘அரசு பேருந்துகளில் இலவசமாக செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக பைய்யா தோஜ் நாள் முதல் ஒவ்வொரு பேருந்திலும் ‘மார்ஷல்’ எனும் பாதுகாவலர் 13,000 பேர் அமர்த்தப்பட்டுள்ளார்.’ எனத் தெரிவித்தார்.
தீபாவளிக்கு மூன்றாவது நாள் வரும் இந்த பண்டிகையில், சகோதரிகள் தம் சகோதர்களை கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என்பது ஐதீகமாக உள்ளது. இதன்
பின்னணியில் இந்துக்களின் புராண வரலாற்றில் எமதர்மன் மற்றும் அவரது சகோதரியான யமுனாவிற்கும் இடையில் ஏற்பட்ட நீண்ட பிரிவு சம்பவம் நம்பிக்கையாக உள்ளது.