களத்தில் என்ன நடக்கிறது என்பதை நேரில் காண ஒரு வாய்ப்பு: காஷ்மீருக்கு வருகை தரும் தூதுக்குழுவினர் உற்சாகம்

ஏஎன்ஐக்கு பேட்டியளிக்கும் ஐரோப்பிய தூதுக்குழு உறுப்பினர் நதான் கில்
ஏஎன்ஐக்கு பேட்டியளிக்கும் ஐரோப்பிய தூதுக்குழு உறுப்பினர் நதான் கில்
Updated on
1 min read

புதுடெல்லி,

இந்தியா வந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற தூதுக்குழுவினர் ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலவரத்தை பார்வையிட புதுடெல்லியிலிருந்து இன்று காலை உற்சாகத்துடன் புறப்பட்டுச் சென்றனர்.

பிரதிநிதிகள் குழு ஜம்மு-காஷ்மீர் நிர்வாக அதிகாரிகளை சந்திக்கும் என்றும், அவர்கள் வருகையின் போது உள்ளூர்வாசிகளை சந்திப்பதைத் தவிர காஷ்மீர் கவர்னரையும் சந்திப்பார்கள் என்றும் நேற்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

நேற்று இந்தியா வந்த ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் குழுவினர் பிரதமர் மோடியை சந்தித்தனர். பிரதமருடன் கிடைத்த சந்திப்பு மகிழ்ச்சியை தந்ததாக தெரிவித்தனர்.

காஷ்மீர் புறப்படுவதற்கு முன் ஐரோப்பிய பிரதிநிதிகள் குழுவினர் ஏஎன்ஐயிடம் கூறியதாவது:

வேல்ஸில் இருந்து ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் நதான் கில், ​​''வெளிநாட்டுப் பிரதிநிதியாக காஷ்மீருக்குள் செல்வதற்கும், அங்கே களத்தில் என்ன நடக்கிறது என்பதை நேரில் காணவும் இது எங்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது'' என்றார்.

பிரிட்டனைச் சேர்ந்த டேவிட் புல், ''பிரதமரை சந்தித்தது ஒரு கவுரவமிக்க தருணம் ஆகும். உலகளாவிய மருந்துத் தொழில்களைப் பொறுத்தவரை இந்தியா முக்கியமானது. இந்தியா இங்கிலாந்துடன் நம்பமுடியாத சிறப்பான உறவுகளைக் கொண்டுள்ளது'' என்றார்.

பிரதிநிதிகள் குழுவின் மற்றொரு உறுப்பினர், பிரான்ஸைச் சேர்ந்த தியரி மரியானி கூறுகையில், ''இந்தியப் பிரதமருடன் சந்திப்பு சுவாரஸ்யமாக இருந்தது. பிரதமர் இந்திய மக்களைப் பற்றி பேசினார்'' என்றும் கூறினார்.

அலெக்ஸாண்ட்ரா பிலிப்ஸ், ''காஷ்மீருக்குச் சென்று பார்வையிடுவது ஓர் அரிய வாய்ப்பு, அதைச் செய்த முதல் வெளிநாட்டு பிரதிநிதிகள் நாங்கள் என்பதில் தனக்கு பெருமையளிக்கிறது'' என்றார்.

ஏஎன்ஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in