சமூக வலைதளங்களில் தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க மொரீஷியஸ் செல்லும் 3 இளம் இந்திய அதிகாரிகள்

சமூக வலைதளங்களில் தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க மொரீஷியஸ் செல்லும் 3 இளம் இந்திய அதிகாரிகள்
Updated on
1 min read

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி

மொரீஷியஸ் நாட்டு பிரதமர் பிரவீந்த் குமார் ஜுக்நாத் (57) அந்நாட்டு நாடாளுமன்றத்தை கடந்த 6-ம் தேதி கலைத்தார். இத்துடன் வரும் நவம்பர் 7-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவித்தார். தேர்தலின்போது, சமூக வலைதளங்களை கண்காணிக்க வேண்டி மொரீஷியஸ் நாட்டின் தேர்தல் ஆணையம் இந்தியாவிடம் உதவி கோரியுள்ளது. இதை ஏற்று மத்திய அரசும் தனது செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் 3 அதிகாரிகளை மொரீஷியஸுக்கு அனுப்புகிறது.

இதில், ப.அருண் குமார், சையது ரபி ஹாஷ்மி மற்றும் அனுஜ் சாண்டக் ஆகிய மூவரும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இந்திய தகவல் பணி அதிகாரிகள் (ஐஐஎஸ்).

இதில், எளம்பிள்ளையை சேர்ந்த தமிழரான அருண் குமார், திருச்சி என்ஐடியில் பட்டப்படிப்பை முடிந்தவர். தற்போது பிரதமர் அலுவலகத்தின் ஊடகப்பிரிவில் துணை இயக்குநராக பணியாற்றும் அருண், ஐ.டி தொழில்நுட்பத்தை தம் பணியில் அதிகமாகப் பயன்படுத்தி பாராட்டை பெற்றவர். கேரளாவை சேர்ந்த ரபி மக்களவை தேர்தலில் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்காக சமூகவலைதளங்கள் கண்காணிப்பு பிரிவுக்கு தலைமை வகித்திருந்தார். இருவருமே சமூக வலைதளங்கள் கண்காணிப்புப் பிரிவில் பணியாற்றியவர்கள். இவர்களுடன் செல்லும் மூன்றாமவரான ராஜஸ்தானை சேர்ந்த அனுஜ், தேர்தல் ஆணையத்தில் செய்தித்தொடர்பாளர் பிரிவில் இருந்தவர்.

சர்வதேச அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் சமூக வலைதளங்கள் அனைத்து வகையான தேர்தல்களிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால், ஒவ்வொரு நாடும் தனது சட்டதிட்டங்களுக்கு ஏற்றபடி தேர்தல் சமயங்களில் சமூக வலைதளங்களை கண்காணித்து வருகிறது. உதாரணமாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் சமூக வலைதளங்களில் பிரச்சாரத்துக்காக செய்யப்பட்ட செலவுகள் மட்டுமே கண்காணிக்கப்பட்டன.

ஆனால், இந்தியாவில் இதுபோன்ற செலவுகளை கண்காணித்ததுடன், குறிப்பிட்ட நாட்களில் சமூக வலைதளங்களின் பிரச்சாரத்துக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. மத்திய தேர்தல் ஆணையத்தின் இந்தப் பணி சர்வதேச அளவில் அதிக முக்கியத்துவம் பெற்று பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. சிறந்த சுற்றுலா நாடுகளின் பட்டியலில் உள்ள மொரீஷியஸில் சுமார் 60 சதவிகிதம் இந்திய வம்சாவளி வந்தவர்கள். இதில் 15 சதவிகிதம் மக்கள் தமிழர்கள். இந்து குடும்பத்தை சேர்ந்த பிரவீந்த் குமார் ஜுக்நாத் கடந்த 2017-ல் பிரதமராகப் பதவி ஏற்றிருந்தார். இவருக்கு முன்பாக பிரவீந்தின் தந்தையான அனுரோத் ஜுக்நாத், மொரீஷியஸின் பிரதமராக இருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in