

சென்னை
ஆழ்துளைக் கிணறு அமைப்பவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்னென்ன, கைவிடப்பட்ட ஆழ்துளைகளில் இருந்து விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே வழிகாட்டுதல்களை வகுத்து வழங்கியுள்ளது. ஆனால், இன்னும் அந்த விதிமுறைகள் வெறும் காகிதத்தின் அளவிலேயே இருந்து வருகிறது.
திருச்சி நடுகாட்டுப்பட்டி 2 வயது குழந்தை சுஜித் வில்சன் மரணம் அனைத்து தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 25-ம் மாலை 5.40 மணிக்கு ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த சுஜித் வில்சனை 80 மணிநேரத்துக்கும் மேலாக உயிருடன் மீட்க அனைத்து தரப்பினரும் போராடினார்கள்.
ஆனால், குழந்தை சுர்ஜித் இறுதியில் உடல் அழுகிய நிலையில் குழிக்குள் இருந்து மீட்கப்பட்டான் என்று அதிகாலை 2.30 மணிக்கு வருவாய்த்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார். சுஜித்தை உயிருடன் மீட்கவே 88 மணிநேரம் பேரிடர் மீட்புப்படை, தீயணைப்பு படை, ஓஎன்ஜிசி, எல்அன்ட்டி, அமைச்சர்கள், அதிகாரிகள் என பலதரப்பட்டவர்களும் தூக்கமின்றி, உணவின்றி, குடும்பத்தை மறந்து பணியாற்றினார்கள்.
ஆனால், சுஜித்தின் மரணம் அனைவரின் இதயத்தை சுக்குநூறாக்கி இருக்கிறது. இதுபோன்ற துயரமான விபத்துகள் நடந்துவிடக்கூடாது என்பதற்காகவே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே உச்ச நீதிமன்றம் வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றினாலே இதுபோன்ற பெரும்பாலான விபத்துக்களைத் தவிர்த்துவிட முடியும். ஆனால், தமிழக அரசு கடந்த 2015-ம் ஆண்டு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தும், உச்ச நீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கியும் அனைத்தும் இன்னும் காகிதத்தின் அளவிலேயே இருப்பது வேதனைக்குரியது.
உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள், உத்தரவுகளைப் பின்பற்றி அரசால் சட்டம் இயற்ற முடியும், மக்களை கடைபிடிக்க வைக்க முடியும். ஆனால், அதை முறையாகக் கடைப்பிடித்து, பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டியது மக்களின் கடையாகவும் இருக்கிறது.
ஆழ்துளைக் கிணறுகளை வெட்டும் முன் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், அதில் விழுந்து பலியாகும் குழந்தைகளைக் காப்பது குறித்து தொடரப்பட்ட பொதுநலன் வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டு, பிப்பரவி 11-ம் தேதி இந்த வழிகாட்டுதல்களைப் பிறப்பித்தது.
முன்னதாக கடந்த 2009-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு பொதுநலன் கருதி அனுப்பப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் தாமாக முன்வந்து ஆழ்துளைக் கிணறுகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் வெளியிட்டது.
அதன்படி 2010-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், தலைமையில் நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், சி.கே.பிரசாத் ஆகியோர் கொண்ட அமர்வு அனைத்து மாநில அரசுகளும், ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை அறிவித்தது. அதன்பின் 2010-ம் ஆண்டு மே மாதம் பாலகிருஷ்ணன் ஓய்வு பெற்றார்.
அதைத்தொடர்ந்து, அடுத்து வந்த தலைமை நீதிபதி எஸ்.ஹெச்.கபாடியா தலைமையிலான அமர்வு நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஸ்வதந்தர் குமார் ஆகியோர் அந்த விதிமுறைகளில் சில திருத்தங்களைச் செய்தனர். கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி அந்த பொதுநலன் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
இந்த உத்தரவுகளை அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஹெச்.கபாடியா, தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஸ்வதந்தர் குமார் ஆகியோர் பிறப்பித்தனர்.
அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது:
- ஆழ்துளைக் கிணறு அல்லது குழாய் கிணறு(tube well) அமைப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பே நிலத்தின் உரிமையாளர் அல்லது வளாகத்தின் உரிமையாளர், அந்த பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும். அந்த அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர், மாஜிஸ்திரேட், கிராமப் பஞ்சாயத்துத் தலைவர், நிலத்தடி நீர் துறை, சுகாதாரத்துறை அதிகாரி ஆகியோருக்கு ஆழ் துளைக் கிணறு மற்றும் குழாய்க் கிணறு அமைப்பது குறித்து நில உரிமையாளர் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
- ஆழ்துளை கிணறு அமைக்கும் அனைத்து தனியார் நிறுவனங்களும், அரசு நிறுவனங்களும், அரசு-தனியார் கூட்டாக செயல்படும் நிறுவனங்களும் அரசின் பதிவு பெற்றவையாக இருத்தல் அவசியம். அரசாங்கப்பதிவு பெற்றவையாக இருத்தல் அவசியம். ஏனெனில் யாரெல்லாம் ஆழ்துளைக்கிணறு அமைக்க விண்ணப்பித்திருக்கிறார்கள் என்பதை மாவட்ட ஆட்சியர் அறிய உதவும்
- கட்டுமானம் அமைக்கப்படும் போது ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் அறிவிப்புப் பலகை அமைக்க வேண்டும். அந்த அறிவிப்புப் பலகையில் ஆழ்துளை கிணறு அமைக்கும் நிறுவனத்தின் பெயர், முகவரி, கட்டுமானத்தைக் கட்டும் உரிமையாளர் அல்லது நிலத்தின் உரிமையாளர் பெயர், முழு முகவரி ஆகியவை அந்த பலகையில் இடம்பெற வேண்டும்
- கட்டுமானத்தின்போது, ஆழ்துளைக் கிணற்றைச் சுற்றி வேலி அமைத்தல் அல்லது தகுந்த தடுப்புகளை உரிமையாளர் கண்டிப்பாக அமைக்க வேண்டும்
- ஆழ்துளைக் கிணற்றைச் சுற்றி தரை மட்டத்திலிருந்து 0.30 மீட்டர் மற்றும் தரை மட்டத்துக்குக் கீழ் 0.30 மீட்டரில் 0.50x0.50x0.60 மீட்டர் அளவில் அளவில் சிமென்ட் அல்லது கான்கிரீட் தளத்தை அமைக்க வேண்டும்
- ஆழ்துளைக் கிணறு அமைத்தபின், அதில் செல்லும் பிளாஸ்டிக் குழாய் அல்லது இரும்பு குழாயை இரும்பு பிளேட் கொண்டோ அல்லது மூடிக் கொண்டு மூடி பூட்டிவிட வேண்டும்
- ஒருவேளை ஆழ்துளைக் கிணற்றில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் கூட அந்த நேரத்தில் அந்த ஆழ்துளைக் குழாயின் மூடியைத் திறந்தவாறு வைத்திருக்கக் கூடாது.
- ஆழ்துளைக் கிணற்றில் பழுது நீக்கப்பட்டபின் அதைச் சுற்றியுள்ள மண், கற்கள் கொண்டு சுற்றி அடைத்தால் மட்டுமே பணிகள் முடிந்ததாக அர்த்தம் கொள்ளப்படும்
- தண்ணீர் இல்லாமல் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளில் தரைமட்டத்திலிருந்து களிமண், கூழாங்கற்கள், மணல், கற்கள் கொண்டு நிரப்பி தரைமட்டத்துக்கு மூட வேண்டும்.
- ஆழ்துளைக் கிணறு தோண்டிமுடிக்கப்பட்டபின், அந்த குறிப்பிட்ட இடம், அதாவது ஆழ்துளைக் கிணறு அமைக்கப் பயன்படுத்தப்பட்ட இடம் கிணறு தோண்டும்போது எவ்வாறு இருந்ததோ அதேபோன்று மாற்றி அமைத்து, சரி செய்யப்படவேண்டும்
- உச்ச நீதிமன்றம் வழிகாட்டிய நெறிமுறைகள் அனைத்தும் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை அறிய மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் மூலம் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள், குழாய் கிணறுகள் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.
- மாவட்ட அளவில், மண்டல அளவில், கிராம அளவில் பயன்பாட்டில் எத்தனை ஆழ்துளைக் கிணறுகள் இருக்கின்றன, கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் எண்ணிக்கை எவ்வளவு என்பதைக் கண்டறிய வேண்டும். குழாய்க் கிணறுகள் திறந்த நிலையில் எத்தனை இருக்கின்றன, கைவிடப்பட்ட குழாய்க் கிணறுகள் எத்தனை, அவைகளில் எத்தனை தரைமட்டத்துக்கு மூடப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிந்து மாவட்ட அளவில் பதிவேடு பராமரிக்க வேண்டும். கிராமங்களில் இந்த பணிகளை கிராமப்பஞ்சாயத்து தலைவர் அல்லது வேளாண் துறையின் அதிகாரி யாரேனும் செய்ய வேண்டும். நகர்ப்புறங்கள் என்றால் இளநிலைப் பொறியாளர் அல்லது நிலத்தடிநீர் துறை, பொதுச்சுகாதாரம், நகராட்சி ஆகியவற்றிலிருந்து நிர்வாக அதிகாரி ஒருவர் கண்காணிக்க வேண்டும்.
- எந்த நிலையிலாவது ஆழ்துளைக் கிணறு, குழாய்க் கிணறு கைவிடப்பட்டால், நிலத்தடிநீர் துறை, பொதுச்சுகாதாரம், நகராட்சி ஆகியவற்றிலிருந்து நிர்வாக அதிகாரி ஒருவரிடம் இருந்து ஆழ்துளைக் கிணறு முறைப்படி தரைமட்டத்துக்கு மூடப்பட்டுவிட்டது என்று சான்று பெறுதல் வேண்டும். கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் சரியாக மூடப்பட்டுள்ளதா என்பதை அவ்வப்போது மேற்குறிப்பிட்ட துறையின் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். இந்த அனைத்து தகவல்களையும் மாவட்ட ஆட்சியர், வட்டார வளர்ச்சி அதிகாரி பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது