Published : 28 Oct 2019 06:01 PM
Last Updated : 28 Oct 2019 06:01 PM

காங்-என்.சி.பி.யினால்தான் எங்கள் கட்சி தோல்வி கண்டது: காங்கிரஸுக்கு பிரகாஷ் அம்பேத்கர் பதிலடி

மகாராஷ்டிரா தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை பிரகாஷ் அம்பேத்கரின் விபிஏ கட்சி பிரித்ததாகக் காங்கிரஸ் குற்றம்சாட்ட, காங்கிரஸ், என்.சி.பியினால்தான் எங்கள் வாக்குகளும் சிதறியது என்று பிரகாஷ் அம்பேத்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

புனேயில் உள்ள பீமாகோரேகானில் தலித் சமூகத்தினர் மீது நடத்தப்பட்ட கடும் தாக்குதலை அடுத்து இந்த ஆண்டு மார்ச்சில் சாதி எதிர்ப்பு அரசியல் தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் புதிய கட்சியான வஞ்சித் பகுஜன் அகாடி கட்சியைத் தொடங்கினார். லோக்சபா தேர்தலில் 48 இடங்களிலும் போட்டியிடும் என்று அறிவித்தார்.

வேட்பாளர்கள் ஷெட்யூல்ட் வகுப்பிலிருந்தும், சிறிய பிற்படுத்தப்பட்ட சாதிகளிலிருந்தும் தேர்வு செய்து களமிறக்கப்பட்டது. சோதனை முயற்சி ஓரளவுக்கு பலன் அளித்தது 14% வாக்குகளை விபிஏ பெற்றது, சுமார் 41 லட்சம் வாக்குகளையும் பெற்றது. ஆனால் இந்த வாக்குகள் பகிர்வு தேர்தல் வெற்றியில் முடியவில்லை. அப்போதைய கூட்டணி கட்சியான ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் ஒரே வேட்பாளர் அவுரங்காபாத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார். விபிஏ கட்சிக்கு தனிப்பட்ட முறையில் இடம் கிடைக்கவில்லை.

இதனையடுத்து தற்போது நடந்து முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் 242 தொகுதிகளிலும் பிரகாஷ் அம்பேத்கரின் விபிஏ கட்சி போட்டியிட்டது. ஆனால் நடந்தது என்னவெனில் லோக்சபா தேர்தலில் 48 தொகுதிகளில் 41 லட்சம் வாக்குகள் கிடைத்தது 242 சட்டமன்ற தொகுதிகளில் வெறும் 24 லட்சம் வாக்குகளாகக் குறைந்தது. ஒரு இடம் கூட விபிஏ கட்சி வெற்றி பெறவில்லை.

இதனையடுத்து காங்கிரஸ் கட்சி பிரகாஷ் அம்பேத்கரின் விபிஏ கட்சியை ‘ஸ்பாய்லர்’ என்று சாடியது. பாஜக-வின் பி அணி போல் விபிஏ செயல்பட்டதாக காங்கிரஸ் கடும் குற்றம் சாட்டியது. அக்டோபர் 24ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது சமூகவலைத்தளங்களில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சில தொகுதிகளில் வாங்கிய வாக்குகள், விபிஏ வாங்கிய வாக்குகளை ஒப்பிட்டு காங்கிரஸ் வெற்றியைக் கெடுத்தது விபிஏ என்று பரவியது.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து பதிலடி கொடுத்த பிரகாஷ் அம்பேத்கர் “விபிஏ கட்சியின் செயல்பாடுகள் குறித்து இன்னும் கொஞ்சம் நெருக்கமாகப் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. குறைந்தது 9-10 தொகுதிகளில் விபிஏ 2-ம் இடத்தில் உள்ளது. இடங்களை வெற்றி பெறும் வாய்ப்பை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்தான் பறித்தது, உதாரணமாக அகாட் தொகுதியில் பாஜக வேட்பாளர் 48,586 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். அடுத்த இடத்தில் விபிஏ வேட்பாளர் 41, 326 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் 27,679 வாக்குகள் பெற்றார்” என்றார்.

காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை என்பதற்கு பதில் அளித்த பிரகாஷ் அம்பேத்கர், “முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகே சிவசேனா நல்ல நிலையில் இருப்பது தெரியவந்தது. காங்கிரசும், தேசியவாத காங்கிரஸும் சிவசேனாவைத் தொடர்பு கொள்ள முயற்சித்தன. காங்கிரஸ் கட்சியும் காவிக்கட்சியும் கொள்கை அளவில் வேறுபட்டவை. ஆனாலும் சிவசேனாவுடன் கைகோர்க்க காங்கிரஸ் தயாரானது, இப்படிப்பட்ட கட்சியுடன் அரசியல் ரீதியாகவேனும் நாம் எப்படி உடன்பட முடியும்” என்றார் பிரகாஷ் அம்பேத்கர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x