Published : 28 Oct 2019 05:14 PM
Last Updated : 28 Oct 2019 05:14 PM

இனி சரிவு இல்லை;மீண்டு வருவோம்: காங்கிரஸ் குறித்து சல்மான் குர்ஷித் நம்பிக்கை

பெங்களூரு

ஹரியானா, மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது, காங்கிரஸ் கட்சிக்கு இனிமேல் சரிவு இல்லை, நாங்கள் மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை வந்துவிட்டது என்று மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா, ஹரியானாவில் கடந்த 21-ம் தேதி நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடந்த சட்டப்பேரவைத் தேர்தலோடும், மக்களவைத் தேர்தலோடும் ஒப்பிடுகையில் ஓரளவுக்குத் தொகுதிகளைக் கைப்பற்றி இருந்தது.

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து 90 இடங்களுக்கு மேல் இரு கட்சிகளும் கைப்பற்றின. அதேபோல ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி பாஜகவுக்குப் போட்டி தரும் அளவுக்கு 31 இடங்களைக் கைப்பற்றியது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் 14 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றது.

மேலும், ராகுல்காந்தி தலைமையில் மக்களவைத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்த காங்கிரஸ் கட்சி, சோனியா காந்தி இடைக்காலத் தலைவராக வந்தபின் பெற்ற வெற்றிகள் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை அளித்துள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் பெங்களூரில் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார் அப்போது அவரிடம் காங்கிரஸ் கட்சியின் சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:

குழப்பம், சுயசந்தேகம் ஆகிய மோசமான காலத்திலிருந்து காங்கிரஸ் கட்சி மீண்டுவந்துவிட்டது. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வி அடைந்தது. அதன்காரணமாக ராகுல் காந்தியும் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

ஆனால், ஹரியானா, மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் கிடைத்த வெற்றிகள் தொண்டர்களிடையே உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

ஹரியானாவில் கடந்த 2014-ம் ஆண்டு காங்கிரஸ் பெற்ற இடங்களைக் காட்டிலும் இந்த முறை இரு மடங்கு பெற்றுள்ளோம். மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி கடந்த தேர்தலைக் காட்டிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது.

இந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் தொண்டர்களுக்கு 2-வது உயிர்மூச்சை வழங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் ஏராளமான ஆண்டுகள் வாழ்வு இருக்கிறது என்பதை உணர்த்தவே இந்த வெற்றி கிடைத்துள்ளது. நம்பிக்கையுடன், உறுதியுடன் எங்களின் அடுத்த கட்ட போராட்டத்துக்குக் காலடி எடுத்துவைக்க நம்பிக்கை அளித்திருக்கிறது என்பதை உணர்வது அவசியமாகிறது

காங்கிரஸ் கட்சிக்கு இனிமேல் சரிவு இல்லை, மீண்டு வருகிறோம் என்பதை இந்த வெற்றி தெளிவாக உணர்த்துகிறது. தேர்தல் அறிக்கையைச் சிறப்பாகக் காங்கிரஸ் கட்சி தயாரித்து இருந்தது. ஆனால், மக்கள் மத்தியில் தெளிவாகக் கொண்டு சென்றிருக்க வேண்டும். தேர்தல் அறிக்கைக்கும், சில செயல்பாடுகளுக்கும் இருக்கும் முரண்பாடுகளைத் தவிர்ப்பது அவசியம்.
இவ்வாறு சல்மான் குர்ஷித் தெரிவித்தார்

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x