Last Updated : 28 Oct, 2019 05:07 PM

 

Published : 28 Oct 2019 05:07 PM
Last Updated : 28 Oct 2019 05:07 PM

உ.பி.யில் 2022 -ல் தேர்தல்: பிரியங்கா தலைமையில் சந்திக்கத் தயாராகும் காங்கிரஸ்

புதுடெல்லி

உ.பி.யில் வரவிருக்கும் 2022 சட்டப்பேரவை தேர்தலை பிரியங்கா வத்ரா தலைமையில் சந்திக்க காங்கிரஸ் தயாராகிறது. இதில் அவர் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவாரா எனும் கேள்வியும் எழுந்துள்ளது.

உ.பி.யின் 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இது அடுத்து 2022 இல் வரவிருக்கும் உ.பி. சட்டப்பேரவை தேர்தலின் முன்னோட்டமாகக் அம்மாநிலக் கட்சிகள் கருதின.

இதில் பாஜக 7, அதன் கூட்டணியான அப்னா தளம் 1, மீதியுள்ள மூன்றும் சமாஜ்வாதி கைப்பற்றியது. ஒரு தொகுதியையும் வெல்ல முடியாவிட்டாலும் காங்கிரஸின் வாக்கு எண்ணிக்கை 12 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையில் பாஜகவிடம் தோல்வி அடைந்துள்ளனர். காங்கிரஸை விட வலுவான கட்சியாக உ.பி.யில் கருதப்படும் பகுஜன் சமாஜுக்கும் எந்த தொகுதியிலும் வெற்றி கிடைக்கவில்லை.

இதனால், இடைத்தேர்தலில் தங்கள் வளர்ச்சிக்கு பிரியங்காவின் வரவே காரணம் என உ.பி. காங்கிரஸார் கருதுகின்றனர். எனவே, வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை பிரியங்கா தலைமையில் சந்திக்க காங்கிரஸ் விரும்புகிறது.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் உ.பி. மேலவையின் காங்கிரஸ் தலைவர் தீபக்சிங் கூறும்போது, ''பிரியங்காவின் வரவால் உ.பி. காங்கிரஸார் உற்சாகம் அடைந்துள்ளனர். இதன் பலனாகவே இடைத்தேர்தலில் காங்கிரஸ் வளர்ச்சி கண்டுள்ளது. அடுத்து சட்டப்பேரவை தேர்தலுக்கும் பிரியங்காவே தலைமை வகிப்பார்.'' எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராகவும் பிரியங்காவை முன்னிறுத்த வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த அறிவிப்பினால் காங்கிரஸ் மீண்டும் உ.பி.யில் ஆட்சியை பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனவும் அக்கட்சியினர் கருதுகின்றனர்.

மக்களவை தேர்தலில் தனது தீவிர அரசியல் பிரவேசத்திற்கு முன் பிரியங்காவின் வரவு உ.பி.யில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இவரது வரவால் உ.பி.யில் காங்கிரஸுக்கு மாபெரும் வெற்றி கிடைக்கும் எனவும் கட்சியினர் நம்பி வந்தனர்.

ஆனால், பிரியங்கா பிரச்சாரம் செய்தும் கடந்த மூன்று மக்களவையிலும் எம்.பியாக இருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதியில் தோல்வி அடைந்திருந்தார். எனவே, முதல்வர் வேட்பாளராக பிரியங்காவை முன்னிறுத்த காங்கிரஸின் தேசியத் தலைமை சம்மதிக்காது எனக் கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x