Published : 28 Oct 2019 04:35 PM
Last Updated : 28 Oct 2019 04:35 PM

கடும் விமர்சனத்துக்கு ஆளாகி வரும் வாரிசு அரசியலைப் பெருமையாகப் பேசி டெபாசிட் இழந்த காங்கிரஸ்: கோட்டை கிஷன்கஞ்ச் சரிந்த கதை

பிஹார் சட்டப்பேரவைத் தொகுதியான கிஷன்கஞ்ச் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி டெபாசிட் இழந்தது கட்சி வட்டாரங்களில் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிஷன்கஞ்ச் தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகக் கருதப்பட்டது, கடைசியில் ‘வெறுக்கத்தக்க’ பேச்சினால் சரிவு கண்டுள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர் சயீதா பானு 70 வயதைக் கடந்தவர். இவர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒரே பிஹார் எம்.பி.யான முகமது ஜவைத் ஆசாத்தின் தாயாராவார்.

இவர் வெற்றிக்குப் பெரிதும் நம்பியிருந்தது காங்கிரஸ் கோட்டை என்ற பிம்பம் மற்றும் லாலு மகன் தேஜஸ்வி யாதவ்வின் பிரச்சாரத்தையும்தான், சயீதா பானுவுக்காக 2 கூட்டங்களில் தேஜஸ்வி பேசுவதாக ஏற்பாடு. ஆனால் கூட்டத்தினர் காத்திருந்தும் தேஜஸ்வின் ஹெலிகாப்டர் இறங்கவேயில்லை. இது மட்டும் காரணமல்ல காங்கிரஸ் வேட்பாளர் சயீதா பானு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் 17 நாட்கள் சென்று முதன் முதலில் மக்களிடையே உரையாற்றியதும் டெபாசிட் இழப்புக்குக் காரணமாகியுள்ளது.

அவர் பேசும்போது தன் மகன் லோக்சபா எம்.பி.யானது குறித்து பெருமை பேசி முடித்து விட்டு, “கிஷன்கஞ்ச் எப்போதுமே காங்கிரஸ் கட்சியின் கோட்டை. கிஷன்கஞ்ச் காங்கிரஸை ஒருபோதும் மறக்காது. எனக்குப் பிறகு என் மகன், என் பேரன், பேத்தி மற்றும் சிலர் வெற்றி பெறுவார்கள். ஆனால் கிஷன்கஞ்ச் தொகுதியை காங்கிரஸ் ஒரு போதும் இழக்காது” என்று வாரிசு அரசியலை வெறுக்கும் காலக்கட்டத்தில் வாரிசு அரசியலை விதந்தோதி பேசினார்.

காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பாஜக-வின் பிரதான குற்றச்சாட்டுகளில் அதிக முக்கியத்துவம் பெற்றது காங்கிரஸ் கட்சியின் வாரிசு அரசியல்தான், மக்கள் அதனை கவனிக்கத் தொடங்கி காங்கிரஸ் மீது வெறுப்படைந்து வரும் சூழ்நிலையில் அவர் வாரிசு அரசியலை விதந்தோதிப் பேசியுள்ளார். சயீதா பானுவின் அதீத நம்பிக்கைக்குக் காரணம், இவரது கணவர் ஹுசைன் ஆசாத் 1967 முதல் 1995 வரை கிஷன் கஞ்ச் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக 5 முறை வென்று பிஹார் சட்டப்பேரவைக்குச் சென்றவர். இவரது மகனும் தந்தை வழியில் சென்று 2019-ல் எம்.பி.யாவதற்கு முன்பாக 4 முறை பிஹார் சட்டப்பேரவைக்கு இதே தொகுதியில் தேர்வு செய்யப்பட்டார்.

சயீதா பானுவுக்கோ, மகன் ஜவைத்துக்கும் வாரிசு அரசியல் என்ற விமர்சனம் மக்களிடையே ஏற்படுத்திய தாக்கம் என்னவென்பது தெரியவில்லை. அவர் கூறிய போது, ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி ஒவைஸியின் சகோதரர்களால் நடத்தப்படுகிறது, பாஜக வேட்பாளர் ஸ்வீட்டி சிங்கும் முன்னாள் எம்.எல்.ஏ சிகந்தர் சிங்கின் மனைவியாவார், ஆகவே காங்கிரஸ் மட்டும்தான் வாரிசு அரசியல் செய்கிறதா என்று அவர் கேட்டார்.

ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் வேட்பாளர் கம்ருல் ஹுதா கடைசியில் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்களை பின்னுக்குத்தள்ளி கிஷன் கஞ்ச் தொகுதியைக் கைப்பற்றியது. கம்ருல் ஹுதா 41.46% வாக்குகளைப் பெற்று தொகுதியைக் கைப்பற்றி பாஜக வேட்பாளரை சுமார் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். 14.88% வாக்குகளுடன் காங்கிரஸ் வேட்பாளர் சயீதா பானு டெபாசிட் இழந்தார் என்பதன் பின்னணி இதுதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x