Published : 28 Oct 2019 04:38 PM
Last Updated : 28 Oct 2019 04:38 PM

ஐரோப்பிய எம்.பி.க்கள் குழு நாளை காஷ்மீர் செல்கிறது: பிரதமர் மோடியுடன் சந்திப்பு 

புதுடெல்லி

தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்போர், உதவி செய்வோருக்கு எதிராக நடவடிக்கை அவசியம் எடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய எம்.பி.க்கள் குழுவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 28 எம்.பி.க்கள் புதுடெல்லி வந்துள்ளனர். இந்த 28 எம்.பி.க்களும் பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகியோரைச் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார்கள். இந்த குழுவினர் நாளை ஜம்மு காஷ்மீர் சென்று அங்குள்ள மக்கள், மற்றும் காஷ்மீர் நிர்வாகத்துடன் பேச உள்ளார்கள்.

ஐரோப்பிய யூனியன் எம்பி.க்கள் குழுவில் இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மன்,இங்கிலாந்து,போலந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த எம்.பிக்கள் இடம் பெற்றுள்ளனர். ஜம்முகாஷ்மீர் மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு வரும் 31-ம் தேததி முதல்நடைமுறைக்கு வருவதற்கு சில நாட்களுக்கு முன் இந்த எம்.பி.க்கள் குழுவினர் அங்கு செல்ல இருக்கின்றனர்.

பிரதமர் மோடியைச் சந்தித்து 28 எம்.பி.க்களும் பேசிய நிலையில், தேசியபாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அனைத்து எம்.பி.க்களுக்கும் மதிய விருந்து அளித்தார். மேலும், காஷ்மீர் மாநிலத்தின் சில அரசியல் தலைவர்களையும் எம்.பி.க்கள் சந்தித்துப் பேசினார்கள். இந்த எம்.பி.க்கள் அனைவரும் தங்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் வந்துள்ளார்கள், ஐரோப்பிய யூனியன் தரப்பில் வரவில்லை என்று டெல்லியில் உள்ள ஐரோப்பிய யூனியன் தூதரகம் விளக்கம் அளித்துள்ளது. வெஸ்ட் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அழைப்பில் எம்.பி.க்கள் வந்துள்ளார்கள்.

ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி சந்தித்தது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தீவிரவாதத்தை ஒருபோதும் இந்தியா பொறுத்துக்கொள்ளாது, அதில் துளி அளவும்கூட சமரசம் செய்து கொள்ளாது. (பாகிஸ்தான் பெயர் குறிப்பிடாமல்) தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்படுவோர், நிதியுதவி அளிப்போர் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது அவசியம் என்று ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சுற்றிப்பார்க்க இருக்கும் எம்.பி.க்களுக்குச் சிறப்பான பயணமாக அமையும். ஜம்மு காஷ்மீர் செல்லும் எம்.பி.க்கள் அங்குள்ள கலாச்சாரம், மத ஒற்றுமை ஜம்மு, காஷ்மீர், லடாக் பகுதியில் எவ்வாறு இருக்கிறது என்பதை அறிவார்கள்.

லடாக், ஜம்மு, காஷ்மீர் பகுதியில் வளர்ச்சிக்காக மத்திய அரசு எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்த விவரங்களை ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் அறிய வாய்ப்பு கிடைக்கும்.

எளிதாகத் தொழில் செய்யும் நாடுகள் பட்டியலில் கடந்த 2014-ம் ஆண்டில் இந்தியா 142-வது இடத்திலிருந்த நிலையில் தற்போது 63-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பூகோள ரீதியாக பல்வேறு வேற்றுமைகள், அளவில் மிகப்பெரிய நாடு இதுபோன்ற மகத்தான சாதனையைச் செய்துள்ளது. மக்கள் விருப்பத்தின் அடிப்படையில், அனுகும் வகையில் அரசின் சேவைகள், செயல்பாடு இருந்து வருகிறது.

தேசத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் எளிதாக வாழும் சூழலை ஏற்படுத்தும் நோக்கில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. அதற்காகத்தான் ஸ்வச் பாரத் திட்டம், ஆயுஷ்மான் பாரத் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

2025-ம் ஆண்டுக்குள் நாட்டில் காசநோயை ஒழிக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது, ஆனால், உலக அளவில் 2030ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் நாங்கள் 5 ஆண்டு முன்பாகவே அதை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளோம். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும், வனங்களைப் பாதுகாக்கவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டிலும் அதிகமான அக்கறை எடுத்து வருகிறோம். குறிப்பாக ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து வருகிறோம்.
இவ்வாறு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x