Published : 28 Oct 2019 01:34 PM
Last Updated : 28 Oct 2019 01:34 PM

பிரதமர் மோடி விமானம் பறக்க அனுமதி மறுப்பு: பாக். செயலை சர்வதேச அளவில் கொண்டு செல்கிறது இந்தியா

புதுடெல்லி

பிரதமர் நரேந்திர மோடியின் விமானம், பாகிஸ்தான் வான்வெளியில் பறப்பதற்கு அந்த நாடு அனுமதி மறுத்த விவகாரத்தைச் சர்வதேச விமானப்போக்குவரத்து அமைப்பிடம் எடுத்துச் சென்று புகார் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது

பிரதமர் மோடி இரு நாட்கள் பயணமாக இன்று பிற்பகலுக்குப் பின் சவுதி அரேபியா செல்ல உள்ளார். இதற்குப் பாகிஸ்தான் வான்வெளி வழியாகப் பிரதமர் மோடியின் விமானம் செல்ல வேண்டும் என்பதால், அதற்கான அனுமதி கோரி பாகிஸ்தான் அரசிடம் மத்திய அரசு கோரியது.

ஆனால், பாகிஸ்தான் அரசு பிரதமர் மோடியின் விமானம் தங்கள் வான்வெளியில் பறப்பதற்கு அனுமதி மறுத்துவிட்டது. சர்வதேச விமானப்போக்குவரத்து விதிப்படி, ஒரு நாட்டின் எல்லைக்குள் பறக்க அனுமதி கோரும் போது அதற்கு அந்த குறிப்பிட்ட நாடு விதிமுறைகளுக்கு உட்பட்ட அனுமதி வழங்கலாம்.

ஆனால், இந்திய அரசு தொடர்ந்து அனுமதி கோரியும், பாகிஸ்தான் மறுத்து வருகிறது. ஆகையால், இது குறித்து சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பிடம் புகார் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மேலும், காஷ்மீர் விவகாரத்தைக் காரணம் காட்டி, சர்வதேச விதிமுறைகளை மதிக்காமல் பாகிஸ்தான் தொடர்ந்து பிரதமர் மோடியின் விமானத்துக்கு அனுமதி மறுத்துவருகிறது என்று மத்திய அரசு சார்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

பாகிஸ்தான் அரசின் ரேடியா பாகிஸ்தான் நேற்று வெளியிட்ட செய்தியில், " சவுதி அரேபியாவுக்கு செல்லும் இந்தியப் பிரதமர் மோடி நம்முடைய வான்வெளியைப் பயன்படுத்திப் பறக்க அனுமதிக்க முடியாது என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளதாக" அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே பாகிஸ்தான் அரசின் முடிவை எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும் எனக் கோரி இந்தியத் தூதர் அஜய் பிசாரியா பாகிஸ்தானிடம் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த செப்டம்பர் 20-ம் தேதி அமெரிக்காவுக்கு 74-வது ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கப் பிரதமர் மோடி செல்லும் போதும், இதேபோன்று தங்கள் வான்வெளியில் பறக்க அனுமதிக்க முடியாது என்று பாகிஸ்தான் மறுத்தது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐரோப்பிய பயணம் செல்லும்போதும் பாகிஸ்தான் இதேபோன்று மறுத்தது.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x