Published : 28 Oct 2019 12:05 PM
Last Updated : 28 Oct 2019 12:05 PM

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி: சுயேட்சை எம்எல்ஏக்களை இழுக்க முயற்சி; சிவசேனா, பாஜக தரப்பில் தனித்தனியாக ஆளுநருடன் சந்திப்பு


மும்பை

மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா இணைந்து ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. பாஜகவுக்கு ஆதரவாக 3 சுயேட்சை எம்எல்ஏக்களும், சிறு கட்சியைச் சேர்ந்த இரு எம்எல்ஏக்கள் சிவசேனாவுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை இன்று சிவசேனாத் தலைவர் உத்தவ் தாக்கரேயும், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் தனித்தனியே சந்திக்க திட்டமிட்டுள்ளார்கள்.

மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த 21-ம் தேதி தேர்தலும் 24-ம் தேதி வாக்குகளும் எண்ணப்பட்டன. இதில் சிவசேனா கட்சிக்கு 56 இடங்களும், பாஜகவுக்கு 105 இடங்களும் கிடைத்தன.
கடந்த 2014-ம் ஆண்டு சிவசேனாவுக்கு 63 இடங்கள் கிடைத்த நிலையில், இந்த முறை 7 இடங்கள் குறைவாக 56 இடங்களும், பாஜகவுக்கு 2014-ம் ஆண்டில் 122 இடங்கள் கிடைத்த நிலையில் இந்த முறை 17 இடங்கள் குறைவாக 105 தொகுதிகள் மட்டுமே கிடைத்துள்ளன.

தேர்தலுக்கு முன் சிவசேனா, பாஜக செய்து கொண்ட உடன்படிக்கையின்படி, 5 ஆண்டுகளில் இரண்டரை ஆண்டுகள் பாஜகவும், மீதமுள்ள இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவும் முதல்வர் பதவியைப் பகிர்ந்து கொள்ள முடிவு செய்திருந்தன. ஆனால், இப்போது முதல்வர் பதவியைப் பகிர்ந்து கொள்வதற்கு பாஜக தரப்பில் சம்மதம் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், தனித்து ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை. ஆனால், பாஜகவிடம் தற்போது 105 இடங்கள் மட்டுமே இருப்பதால் சிவசேனா ஆதரவோடுதான் ஆட்சி அமைக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.

தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியில், " 50:50 அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளும் திட்டத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. பாஜக தரப்பிலும் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலிலும், சட்டப்பேரவைத் தேர்தலிலும் நாங்கள் குறைந்த எண்ணிக்கையில்தான் போட்டியிட்டோம். தேர்தல் நேரத்தில் அமித் ஷாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை நினைவுபடுத்துகிறோம்" எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே கடந்த இரு நாட்களாக சிவசேனாக் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இதில் பாஜகவிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக உறுதிமொழியை வாங்க வேண்டும், முதல் முறையாக எம்எல்ஏவாக வெற்றி பெற்றுள்ள ஆதித்யா தாக்கரேவை முதல்வராக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

அதேசமயம், பாஜகவுடன் கூட்டணி சேராமல், வேறு கூட்டணி அமைத்து, ஆட்சி அமைப்பதற்கான வழிகளும் சிவசேனா எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கான முயற்சிகளை நோக்கி நகரவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆனால், தேர்தல் பிரச்சாரத்தின்போது மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் மீண்டும் ஆட்சி மலரும், முதல்வராக பட்னாவிஸ் வருவார் என்று பிரதமர் மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் பேசினார்கள்.
ஆனாலும், இரு கட்சி தரப்பிலும் சுயேட்சை எம்எல்ஏக்கள், சிறு கட்சிகளின் எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். அதன்படி, 3 சுயேட்சை எம்எல்ஏக்கள் பாஜகவுக்கும், சிறுகட்சியைச் சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் சிவசேனாவுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்

சோலாப்பூர் மாவட்டம், பார்ஷி தொகுதியைச் சேர்ந்த ராஜேந்திர ராவத், அமராவதி மாவட்டம், பத்நேரா தொகுதியில் வென்ற ரவி ராணா, தானே மாவட்டத்தில் வென்ற கீதா ஜெயின் ஆகிய 3 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளனர். முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை நேற்றுசந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தார்கள்.
முன்னதாக பிரகார் ஜனசக்திகட்சியைச் சேர்ந்த அச்சல்பூர் எம்எல்ஏ பச்சு காட், மேல்காட் தொகுதி எம்எல்ஏ ராஜ்குமார் படேல் ஆகியோர் சிவசேனாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், " எங்கள் பக்கம் எம்எல்ஏக்கள் சேர்வதால், பாஜகவுடன் பேரம் பேசும் வலிமை எங்களுக்கு அதிகரிக்கும். கடந்த 2014-19-ம் ஆண்டில் பாஜக ஆட்சி அமைக்க ஒத்துழைத்தோம், இந்தமுறை எங்களுக்கான சுற்று நாங்கள்தான் ஆட்சி அமைப்போம்" எனத் தெரிவித்தார்.

இதனால், சிவசேனாவும், பாஜகவும் தனித்து ஆட்சி அமைக்கும் நோக்கில் சுயேட்சை எம்எல்ஏக்களுக்கு வலைவீசும் திட்டத்தை அரங்கேற்றி வருகின்றன.

இந்த சூழலில் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் இன்று தனித்தனியே சந்தித்து பேச இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங்கை இன்று சந்தித்த முதல்வர் பட்னாவிஸ் : படம் ஏஎன்ஐ

இதுகுறித்து பாஜக, சிவசேனா வட்டாரங்கள் கூறுகையில், " இது பண்டிகை காலம் என்பதால் ஆளுநரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவிக்க முதல்வர் பட்நாவிஸும் , சிவசேனா தலைவரும் செல்வார்கள்.
ஆனால், இதில் அரசியல் ஏதும் பேசப்படாது என்றே நம்புகிறோம். அடுத்த ஆட்சி் யார் அமைப்பது என்ற பேச்சும் இருக்காது என்றே நம்புகிறோம். ஆனால், என்ன பேசப்படும் என்பதுகுறித்து தெரியாது" எனத் தெரிவிக்கின்றன

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x