Published : 27 Oct 2019 10:18 AM
Last Updated : 27 Oct 2019 10:18 AM

பாஜகவை எச்சரிக்கும் இடைத்தேர்தல் முடிவுகள்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி

மகாராஷ்டிரா, ஹரியாணா ஆகிய 2 மாநில சட்டப் பேரவைத் தேர்தலுடன் நாட்டின் 11 மாநிலங்களில் 51 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் இரண்டு மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றிருந்தது. இதன் முடிவுகள் பாஜகவை எச்சரிக்கும் வகையில் அமைந்துள்ளன.

தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமராக பதவி வகித்து வரும் நரேந்திர மோடிக்கு மக்களவை தேர்தலில் கூடுதல் ஆதரவு கிடைத்திருந்தது. அதேசமயம், பாஜகவின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி செய்த ராஜினாமாவுக்கு பின் உருவான குழப்பம் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. மற்ற எதிர்க்கட்சிகளும் தங்களுக்குள் கூட்டணியை முறித்துக் கொண்டன. இந்த சூழலில் அதீத நம்பிக்கையுடன் இடைத்தேர்தலை சந்தித்த பாஜகவுக்கு அதன் முடிவுகள் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளன.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு மறுவாய்ப்பு கிடைத்தும் அதன் மக்களவை தொகுதியான சதாரா இடைத்தேர்தலில் தோல்வி ஏற்பட்டுள்ளது. இங்கு சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்(என்சிபி) எம்பியாக இருந்த உதயன் ராஜே போஸ்லே, தேர்தலுக்கு சற்று முன்பாக பாஜகவில் இணைந்திருந்தார். இதனால், காலியான அந்த தொகுதியில் பாஜக சார்பில் சத்ரபதி சிவாஜியின் 13 ஆவது வாரிசான போஸ்லேவை மீண்டும் போட்டியிட வைத்தனர். ஆனால், அங்கு நிவாச பாட்டீல் என்பவரை நிறுத்திய தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கே (என்சிபி) மீண்டும் வெற்றி கிடைத்துள்ளது.

எனினும், பிஹாரின் சமஸ்திபூர் தொகுதியில் லோக் ஜனசக்தி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.

குஜராத்தை மாதிரி மாநிலமாக முன்வைத்து வளர்ந்த பாஜகவுக்கு அதன் ஆறு சட்டப்பேரவை தொகுதிகளில் மூன்றில் காங்கிரஸிடம் தோல்வி கிடைத்துள்ளது. இதில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் இளம் தலைவரான அல்பேஷ் தாக்கூர், தவல்சின்ஹ ஜாலா ஆகியோர் காங்கிரஸில் இருந்து சென்று பாஜகவில் போட்டியிட்டவர்கள். ம.பி.யில் பாஜகவின் பாரம்பரிய சட்டப்பேரவை தொகுதியான ஜாபுவாவை காங்கிரஸிடம் இழந்துள்ளது. ராஜஸ்தானிலும் பாஜகவிடமிருந்து ஒரு சட்டப்பேரவை தொகுதியை பறித்து காங்கிரஸ் மேலும் உறுதியாகி உள்ளது. அனைத்தும் சேர்த்து 11 மாநிலங்களின் 51 சட்டப்பேரவை தொகுதிகளில் பாஜக மற்றும் அதன் கூட்டணிகளுக்கு 30, காங்கிரஸுக்கு 12 மற்றும் மீதியுள்ள பிராந்தியக் கட்சிகளுக்கு எஞ்சிய தொகுதிகள் சென்றுள்ளன.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் பாஜகவின் தேசிய நிர்வாகிகள் வட்டாரங்கள் கூறும்போது, ‘தேசிய பிரச்சினைகளை மட்டும் நம்பி செய்த பிரச்சாரமும், மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களை மீண்டும் நிறுத்தியதும் பாஜகவின் இந்த தோல்விக்கானக் காரணங்கள். வலுவான எதிர்க்கட்சிகள் இல்லை என்றாலும் இந்த இடைத்தேர்தலின் முடிவுகள் பாஜகவுக்கு எதிர்கால எச்சரிக்கையாக அமைந்துள்ளது’ எனத் தெரிவித்தன.

உ.பி., குஜராத் மற்றும் பிஹார் இடைத்தேர்தல்களின் பாதிப்பு அம்மாநிலங்களில் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தவகையில், பாஜகவுக்கு கிடைக்காமல் போன 21 தொகுதிகளால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் லாபம் அடைந்துள்ளன. உ.பி.யின் 11-ல் பாஜகவின் வெற்றி 7-ல் மட்டுமே. ஆஸம்கானின் ராம்பூர் உள்ளிட்ட மூன்று தொகுதிகளில் சமாஜ்வாதி வெற்றி பெற்றுள்ளது. மீதம் ஒன்றில் சோனுலால் பட்டேல் பிரிவின் அப்னாதளம் வென்றுள்ளது. ஆனால், நீண்ட இடைவெளிக்கு பின் இடைத்தேர்தலில் போட்டியிட்ட மாயாவதியின் பகுஜன் சமாஜுக்கும், காங்கிரஸுக்கும் படுதோல்வி கிடைத்துள்ளது. பாஜக வெற்றி பெற்றுள்ள ஏழு தொகுதிகளில் மூன்றில் சமாஜ்வாதி கட்சி இரண்டாவது இடம் பெற்றுள்ளது. இதன்மூலம், பாஜகவின் முக்கிய எதிர்க்கட்சியாக உ.பி.யில் சமாஜ்வாதி உருவெடுத்துள்ளது.

பிஹாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பழைய வரவேற்பு கிடைக்கவில்லை. இதன் முக்கியக் கட்சியான நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் இரண்டிலும், அகில இந்திய மஜ்லீஸ்-எ-இத்தாதுல் முஸ்லிம் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சை வேட்பாளர் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். ஹைதராபாத் எம்.பியான அசாதுதீன் ஒவைஸியின் கட்சிக்கு முதன்முறையாக பிஹாரில் ஒரு தொகுதி கிடைத்துள்ளது.

அசாமில் பாஜக வசமிருந்த 4 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 3-ல் பாஜக வென்றுள்ளது. ஒரு தொகுதியை முஸ்லிம் கட்சியான அகில இந்திய ஐக்கிய முன்னணியிடம் இழந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x