Published : 27 Oct 2019 10:12 AM
Last Updated : 27 Oct 2019 10:12 AM

காஷ்மீரில் செய்தியாளர்களை அனுமதிக்க வேண்டும்: இந்திய தூதருக்கு அமெரிக்க அரசியல்வாதிகள் கடிதம்

புதுடெல்லி

காஷ்மீருக்குள் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களை அனுமதிக்கக் கோரி அமெரிக்காவுக்கான இந்தியத் தூதருக்கு அமெரிக்காவைச் சேர்ந்த அரசியல்வாதிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காஷ்மீர் தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே பிரச்சினை நிலவி வரும் நிலையில் அந்த மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது தொடர்பாக ஐ.நா. சபை உள்ளிட்ட அமைப்புகளிடம் பாகிஸ்தான் புகார் செய்தது.

இந்நிலையில் காஷ்மீருக்குள் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரி அமெரிக்காவைச் சேர்ந்த 6 அரசியல்வாதிகள் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ஹர்ஷ் வர்தன் ஷிருங்க்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த எம்.பி.க்கள் டேவிட் என்.சிசிலின், டினா டைட்டஸ், கிறிஸ்ஸி ஹவுலாஹான், ஆன்டி லெவின், ஜேம்ஸ் பி.மெக்கவர்ன், சூசன் ஆகியோர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:காஷ்மீரில் உள்ள சூழ்நிலையை இந்திய அரசு உலகுக்கு விளக்கியுள்ளது. ஆனால் அங்கிருந்து வெளியாகும் செய்திகள் வேறுவிதமாக உள்ளன.

எனவே அங்குள்ள உண்மையான நிலவரத்தை அறிந்துகொள்வதற்கு வசதியாக வெளிநாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்களை காஷ்மீருக்குள் அனுமதிக்க வேண்டும்.

காஷ்மீர் விவகாரம் குறித்து வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான பத்திரிகையாளர்கள் அதிக அளவில் செய்திகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளனர். அவர்களுக்கு அங்குள்ள நிலைமை தெரியும். எனவே அவர்களை காஷ்மீருக்குள் அனுமதிக்கவேண்டும். காஷ்மீருக்குள் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி தரும் நிலையில் அங்குள்ள உண்மை நிலவரம் தெரியவரும் என்று நம்புகிறோம். மேலும் அரசியல், பொருளாதாரச் சூழ்நிலையை இயல்புநிலைக்குக் கொண்டு வரவேண்டும். அதுமட்டுமல்லாமல் வீட்டுச் சிறையில் வைத்திருக்கும் காஷ்மீரைச் சேர்ந்த அரசியல்வாதிகளை உடனடியாக விடுவிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் அண்மையில் தெற்காசிய மண்டலத்தில் குறிப்பாக காஷ்மீரில் நிலவும் மனித உரிமைகள் தொடர்பான கூட்டம் வாஷிங்டனில் நடைபெற்றது. அதில் அமெரிக்க எம்.பி.க்களும், அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ஷிருங்க்லாவும் கலந்துகொண்டனர். அப்போது அமெரிக்காவைச் சேர்ந்த அரசியல்வாதிகள் எழுப்பிய கேள்விக்கு ஷிருங்க்லா பதிலளித்தார்.

அப்போது அவர்கள் ஜம்மு - காஷ்மீரில் தரைவழி தொலைபேசி சேவைகள் 100 சதவீதம் தொடங்கிவிட்டதா, அனைத்து செல்போன் சேவைகள், இணையதள சேவைகள் தொடங்கிவிட்டதா, காஷ்மீரில் கைது செய்யப்பட்ட தலைவர்கள் எத்தனை பேர் போன்ற கேள்விகளை எழுப்பினர். இதற்கான பதிலை அப்போது தூதர் ஹர்ஷ் வர்தன் ஷிருங்க்லா அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x