Last Updated : 26 Oct, 2019 02:36 PM

 

Published : 26 Oct 2019 02:36 PM
Last Updated : 26 Oct 2019 02:36 PM

தோல்வியிலும் வெற்றி: இருமாநில சட்டப்பேரவை தேர்தலில் புத்துணர்ச்சி பெற்ற எதிர்கட்சிகள்

புதுடெல்லி

நடந்து முடிந்த மகாராஷ்டிரா, ஹரியாணா சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் கட்சிக்கே மறுவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால், பெரிய நம்பிக்கை எதுவும் இன்றி இதில் போட்டியிட்ட எதிர்கட்சிகள் தோல்வியிலும் வெற்றியாகப் புத்துணர்ச்சி பெற்றுள்ளன.

கடந்த மே மாதம் முடிந்த மக்களவை தேர்தலில் மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்தது. இதில், முன்பை விட அதிகமான ஆதரவு பெற்று பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவி ஏற்றிருந்தார்.

இதனால், நிலைகுலைந்து போயிருந்த எதிர்கட்சிகள் தங்களுக்கு இடையிலான கூட்டணியை முறித்துக் கொண்டன. காங்கிரஸின் தலைமை ஆட்டம் கண்டதுடன் பாஜக மேலும் வலிமை அடைந்தது.

இதுவரை இல்லாத இந்த அரசியல் மாற்றமாக, எம்எல்ஏ மற்றும் எம்.பிக்கள் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் பல முக்கிய தலைவர்களும் பாஜகவிற்கு தாவத் துவங்கின. இந்த சூழலில் அறிவிக்கப்பட்ட இருமாநில சட்டப்பேரவை தேர்தலில் எதிர்கட்சிகள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.

இருமாநிலங்களிலும் பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் எனக் கருதி, பெயரளவிற்கு எதிர்கட்சிகள் களத்தில் குதித்தன. ஆனால் இந்த தேர்தலின் மூலம், உலகின் சிறந்த ஜனநாயக நாடான இந்தியாவில் வாக்காளர்கள் மனநிலை எவராலும் கணிக்க முடியாது என்ற கருத்து உருவாகி உள்ளது.

ஏனெனில், எதிர்கட்சிகளே எதிர்பார்க்காத அளவில் அவைகளுக்கு முன்பை விட அதிகமான தொகுதிகள் இரண்டு மாநிலங்களிலும் கிடைத்துள்ளன. இதன் காரணமாக தற்போதைய சட்டப்பேரவை தேர்தல் எதிர்கட்சிகளுக்கு புத்துணர்ச்சி அளித்துள்ளது.

ஹரியாணாவின் 90 இல் 46 பெற்று கடந்தமுறை முதன்முறையாக தனிமெஜாரிட்டியுடன் பாஜக ஆட்சி அமைத்திருந்தது. இந்த பெருமிதத்தில் அக்கட்சி, ‘அடுத்தமுறை 75 தொகுதிகளில் வெற்றி’ என கோஷத்துடன் களத்தில் குதித்தது.

ஆனால், பாஜகவிற்கு ஹரியாணாவில் அதிகமுள்ள ஜாட் சமூகத்தின் வாக்குகளுடன் தொகுதிகளும் ஆறு குறைந்தன. இதனால், அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் அதிகாரம், சுயேச்சைகள் மற்றும் சிறிய புதிய கட்சியான ஜனநாயக் ஜனதாவிடம்(ஜேஜேபி) சென்று விட்டது.

எதிர்கட்சிகள் வரிசையில் இருந்த ஜேஜேபியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலாவிற்கு துணை முதல்வராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இத்தனைக்கும் அவரது கட்சிக்கு கிடைத்த இடங்கள் வெறும் பத்து மட்டுமே.

கடந்த தேர்தலை விட 15 அதிகமாக 31 தொகுதிகளில் காங்கிரஸ் பெற்று உற்சாகம் அடைந்துள்ளது. இக்கட்சியின் முன்னாள் முதல்வரான பூபேந்தர்சிங் ஹுட்டா மீண்டும் பலம் அடைந்துள்ளார். நீண்ட கால இடைவெளிக்கு பின் சுயேச்சைகளும் ஹரியாணாவில் மீண்டும் தலைதூக்கத் துவங்கி விட்டன.

ஹரியாணாவை விட சற்று முன்னேற்ற நிலையில் பாஜகவிற்கு மகாராஷ்டிரா அமைந்தது. எனினும், 2014-ன் தேர்தலை விட அதிகமாக சரத்பவாரின் தேசியவாதக் காங்கிரஸுக்கு 13, காங்கிரஸுக்கு இரண்டு தொகுதிகளும் கிடைத்துள்ளன.

இம்மாநிலத்தின் முக்கிய பிராந்தியக் கட்சியான தேசியவாதக் காங்கிரஸ் (என்சிபி), மீண்டும் பலமாக உருவெடுத்துள்ளது. இந்த தேர்தலின் சிறந்த அரசியல்வாதி எனும் பெயர் அக்கட்சியின் 78 வயது தலைவர் சரத்பவாருக்கு கிடைத்துள்ளது.

தனது என்சிபி மட்டும் அன்றி கூட்டணிக்கட்சியான காங்கிரஸின் கவுரவத்தையும் சரத்பவார் காப்பாற்றி உள்ளார். இவர்கள் அளித்த தொகுதிகளை பெற்ற கூட்டணி வைக்க மறுத்த சிறிய கட்சிகளுக்கு புதிய பாடம் புகட்டப்பட்டுள்ளது.

நித்திய கண்டம் பூரண ஆயுசு

இந்த தேர்தலில் பாஜகவை சரத்பவார், ‘நித்திய கண்டம் பூரண ஆயுசு’ எனும் நிலைக்கு தள்ளியுள்ளார். ஏனெனில், பாஜகவின் கூட்டணியான சிவசேனா எந்நேரமும் வெளியேறி சரத்பவாருடன் இணைந்து ஆட்சி அமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

கடந்த தேர்தலில் பாஜகவும், சிவசேனாவும் தனித்து போட்டியிட்டு இதேபோன்ற ஒரு சூழல் ஏற்பட்டது. அப்போது, மராட்டிய மண்ணின் மைந்தர்களிடமே ஆட்சி என சிவசேனாவிற்கு நிபந்தனையற்ற ஆதரவளிப்பதாக சரத்பவார் அறிவித்திருந்தார்.

இந்தமுறையின் சூழலும் அதுபோலவே அமைந்துள்ளதால் பாஜகவின் மறுஆட்சியில் சிவசேனா அதிக செல்வாக்கு பெற சரத்பவார் காரணமாகி உள்ளார். எனவே, தற்போது பாஜகவின் கூட்டணி ஆட்சி அமைந்தாலும் அதனுடன் சிவசேனாவை பிரிக்கும் முயற்சியில் என்சிபி தொடர்ந்து முயற்சிக்கும்.

அதிக முக்கியத்துவம் பெற்ற சிவசேனா

தனிமெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என எண்ணிய பாஜக முன்பை விட குறைவாக 17 தொகுதிகள் பெற்றது. இந்த தேர்தலில் ஏழு தொகுதிகள் குறைவாகப் பெற்றாலும் சிவசேனா கடந்த ஆட்சியை விட அதிக முக்கியத்துவம் பெற்று விட்டது.

இதேபோல், 11 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைக்கு 51 மற்றும் மக்களவைக்கு 2 தொகுதிகளின் இடைத்தேர்தலும் எதிர்கட்சிகளை உற்சாகப்படுத்தி உள்ளன. இதில், பாஜகவுடன் அதன் கூட்டணிகள் சேர்த்து 30 சட்டப்பேரவை, ஒரு மக்களவை தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

குறிப்பாக, உபியின் 11 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலில் சமாஜ்வாதி பாஜகவின் முக்கிய எதிர்கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்தநிலையும் பாஜகவிற்கு எதிராக அமைந்ததாகவே கருதப்படுகிறது.

இந்த தேர்தலில், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து, இந்துத்துவா மற்றும் மோடி அலையை அதிகம் நம்பிய பாஜக, மாநில அரசியலின் பிரச்சனைகளை முன்னிறுத்தவில்லை. இதனால், அதிக பலன் அடைந்த எதிர்கட்சிகள் வரும் தேர்தல்களில் மீண்டும் கூட்டணி அமைக்கும் சிந்தனையில் மூழ்கியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x