

மும்பை
மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சியில் 50:50 பார்முலா என சிவசேனா கோரி வருவதால் புதிய அரசு பதவி ஏற்பதில் தாமதம் நீடித்து வருகிறது.
மகாராஷ்டிராவில் கடந்த 21-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.மகாராஷ்டிரா தேர்தலில் ஆளும் பாஜக - சிவசேனா கூட்டணிக்கும் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 152, சிவசேனா 124, கூட்டணியை சேர்ந்த சிறிய கட்சிகள் 12 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
காங்கிரஸ் 147, அதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் 121 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. பகுஜன் சமாஜ் 262, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா 101, மார்க்சிஸ்ட் 8, இந்திய கம்யூனிஸ்ட் 16 தொகுதிகளில் போட்டியிட்டன.
ஆட்சியைப் பிடிக்க 145 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும் இழந்த ஆட்சியை பிடிக்க காங்கிரஸும் தீவிர முயற்சியை மேற்கொண்டன. பாஜக கூட்டணி 161 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 101 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன.
காங்கிரஸ் கூட்டணி 98 இடங்களில் வென்றன. காங்கிரஸ் 44 தொகுதிகளையும், தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளையும் கைபற்றின. இதர இடங்களில் மற்ற கட்சிகள் வென்றன. இதன் மூலம் மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக – சிவசேனா கூட்டணி ஆட்சி அமையும் சூழல் உள்ளது.
இதனிடையே, மும்பையில் பேட்டியளித்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ‘‘மகாராஷ்டிராவில் பாஜகவும் சிவசேனாவும் அதிகாரத்தை சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இதுதொடர்பாக பாஜக தலைவர் அமித் ஷா ஏற்கெனவே எனது வீட்டுக்கு வந்தபோது பேசினேன். அப்போது, முடிவு செய்யப்பட்டபடி ஆட்சி அதிகாரத்தை 50க்கு 50 என்ற விகிதாச்சார அடிப்படையில் இரு கட்சிகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும்’’ எனக் கூறினார்.
சிவசேனா சமபங்கு கோருவதால் மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைதிவதில் இழுபறி நீடித்து வருகிறது. அம்மாநிலத்தில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் மீண்டும் பதவியேற்பார் என ஏற்கெனவே பாஜக அறிவித்து விட்டது. எனினும் எதிர்கால முதல்வர் ஆதித்ய தாக்கரே என அறிவித்து மும்பையின் பல இடங்களிலும் சிவசேனா சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.