Published : 26 Oct 2019 09:07 AM
Last Updated : 26 Oct 2019 09:07 AM

செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம்; சீனாவால் முடியாததை இந்தியா முதல் முயற்சியிலேயே எட்டியது: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்

புதுடெல்லி

செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் விண்கலத்தை அனுப்பி வெற்றி பெறச் செய்ததன் மூலம் சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் செய்ய முடியாததை இந்தியா முதல் முயற்சியிலேயே செய்து காட்டியது என்று விஞ்ஞானியும், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத் துணைத் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

டெல்லியில் அண்மையில் தேசிய உற்பத்தித்துறை போட்டிக்கான விருதுகள் (என்ஏஎம்சி) வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு மயில்சாமி அண்ணாதுரை முக்கிய உரையாற்றியதாவது:2008-ல் சந்திரயான்-1 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பினோம். அண்மையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமானது (இஸ்ரோ) நிலவுக்கு சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்பி சாதனை படைத்தது. தென் துருவப் பகுதியில் சந்திரயான்-2 விண்கலத்திலிருந்த விக்ரம் லேண்டரை இறக்கும்போது சிறு பிரச்சினையால் இலக்கை எட்ட முடியாமல் போனது. கிட்டத்தட்ட சந்திரயான்-2 திட்டம் வெற்றியடைந்தது போலத்தான்.

ஆனால் அதிலிருந்து பல பாடங்களைக் கற்றுக்கொண்டோம்.

2008-09-ல் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-1 திட்டம் வெற்றியடைந்தது. இது உலக அளவில் நிலவுக்கு அனுப்பப்பட்ட 70-வது விண்கலப் பயணமாகும். நிலவில் நீர் இருப்பதை சந்திரயான்-1 கண்டறிந்து சாதனை படைத்தது.

அதுநாள் வரையில் மத்திய அரசிடமிருந்து விண்வெளித் திட்டங்களுக்கு இஸ்ரோவுக்கு குறைந்த அளவிலேயே நிதி கிடைத்து வந்தது. மேலும் திட்டத்துக்கான ஒப்புதல் கிடைக்கவும் நீண்ட நாட்களாகும். ஆனால் சந்திரயான்-1 திட்ட வெற்றிக்குப் பிறகு செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பும் மிஷன் மங்கள் திட்டத்துக்கு 4 வாரங்களிலேயே மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் கிடைத்தது.

18 மாதங்களில் இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மிஷன் மங்கள் திட்டத்தைச் செயல்படுத்தினோம். அமெரிக்கா 5-வது முறை செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பியபோதுதான் வெற்றி அடைந்தது. அதைப் போல ரஷ்யாவுக்கு 9-வது முறையில்தான் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பியதில் வெற்றி கிட்டியது.

ஆனால் நாம் முதன்முறையிலேயே செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பி வெற்றி பெற்றோம். சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் எட்டாத சாதனையை நாம் முதல் முயற்சியிலேயே எட்டினோம்.

இதைத் தொடர்ந்துதான் சந்திரயான்-2 திட்டத்துக்கு அனுமதி கிடைத்தது. சந்திரயான்-1, மிஷன் மங்கள் திட்டங்களுக்குப் பிறகு இஸ்ரோவால் எந்தத் திட்டத்தையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உலக நாடுகளுக்கு வந்தது.

குறைந்த செலவு, அதிக பயன் என்ற குறிக்கோளுடன் இஸ்ரோ பயணித்து வருகிறது. ஆண்டுக்கு ஒரு முறை அல்லது 2 முறை செயற்கைக்கோள்களை அனுப்பி வந்த நிலையில், இந்தத் திட்டத்துக்குப் பிறகு 4 வாரங்களுக்கு ஒரு முறை செயற்கைக்கோள்களை அனுப்பும் அளவுக்கு முன்னேறி இருக்கிறோம்.

தொடர்ந்து வெற்றி பெற்ற திட்டங்களால் இஸ்ரோவுக்கு அதிக அளவிலான எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஏராளமான திட்டங்களும் இஸ்ரோவுக்குக் கிடைத்தன.

விண்கலத்தை வடிவமைத்து வந்த நிலையில் விண்கலத்தை உற்பத்தி செய்யும் அளவுக்கு வரலாற்றுச் சாதனைகளை நாம் செய்து வருகிறோம். இருண்ட சூழ்நிலையிலிருந்து பொற்காலத்துக்கு பயணித்துக் கொண்டிருக்கிறோம். எதிர்காலத் திட்டங்களுக்காக தற்போது தயாராகி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x