Last Updated : 11 Jul, 2015 08:23 AM

 

Published : 11 Jul 2015 08:23 AM
Last Updated : 11 Jul 2015 08:23 AM

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-28: 5 செயற்கைகோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-28 ராக்கெட் நேற்று இரவு 9.58 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. அதில் இருந்த 5 செயற்கைகோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தப் பட்டன.

பிஎஸ்எல்வி ரக ராக்கெட்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடந்த 1993-ம் ஆண்டு முதல் விண்ணில் ஏவிவருகிறது. உலகிலேயே மிக நம்பகமான ராக்கெட் பிஎஸ்எல்வி என்று இஸ்ரோ கூறுகிறது. இதன் 30-வது பயணமாக பிஎஸ்எல்வி சி-28 ராக்கெட் மூலம் இங்கிலாந்தின் ‘டிஎம்சி3’ வகையை சேர்ந்த 3 செயற்கைகோள்கள், சிபிஎன்டி-1, டி-ஆர்பிட்செயில் என 5 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. இவற்றில், டிஎம்சி3 செயற்கைகோள்களும், சிபிஎன்டி-1 செயற்கைகோளும் சர்ரே சாட்டிலைட் டெக்னாலஜி நிறுவனத்தால் உருவாக்கப் பட்டவை. டி-ஆர்பிட்செயில் செயற்கைகோள் சர்ரே ஸ்பேஸ் சென்டர் அமைப்பால் உருவாக்கப் பட்டது. ராக்கெட் புறப்படுவதற் கான 62 மணி 30 நிமிட கவுன்ட் டவுன் கடந்த 8-ம் தேதி காலை 7.28 மணிக்கு தொடங் கியது.

இந்நிலையில், ஹரிகோட்டா வில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து திட்டமிட்ட படி நேற்று இரவு 9.58 மணிக்கு 5 செயற்கைகோள்களையும் சுமந்து கொண்டு நெருப்பு பிழம்பை கக்கியபடி பிஎஸ்எல்வி சி-28 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

44.4 மீட்டர் உயரம் கொண்ட பிஎஸ்எல்வி ராக்கெட் 4 நிலைகள் கொண்டது. விண்ணில் ஏவப்பட்டு 1 நிமிடம் 50 வினாடியில் 1-வது நிலை, 4 நிமிடம் 22 வினாடியில் 2-வது நிலை, 8 நிமிடம் 37 வினாடியில் 3-வது நிலை, 17 நிமிடம் 19 வினாடியில் 4-வது நிலை பிரிந்தன. டிஎம்சி3-ன் முதல் 2 செயற்கைகோள்கள் 17 நிமிடம் 56 வினாடியிலும், 3-வது செயற்கைகோள் அதற்கு அடுத்த வினாடியிலும் பிரிந்தன. டி-ஆர்பிட்செயில் 18 நிமிடம் 36 வினாடியிலும், சிபிஎன்டி-1 செயற்கைகோள் 19 நிமிடம் 16 வினாடியிலும் பிரிந்தன. கடைசி செயற்கைகோள் பிரிந்தபோது, பூமியில் இருந்து 654.75 கி.மீ. தொலைவில் வினாடிக்கு 7.5314 கி.மீ. வேகத்தில் ராக்கெட் பறந்துகொண்டிருந்தது.

5 செயற்கை கோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தப் பட்டன.

இந்த செயற்கைகோள்கள் பூமியின் மேல் தளத்தை தினமும் படம் பிடித்துக் காட்டும். மண் வளம் உள்ளிட்ட பிற ஆதாரங்கள், நகர்ப்புற உள் கட்டமைப்பு, பேரிடர் கண்காணிப்பு உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு உதவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x