

புதுடெல்லி,
பெண் ஒருவர் தற்கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக புகார் பதிவு செய்யப்பட்ட ஹரியாணாவின் சுயேச்சை எம்.எல்.ஏ. கோபால் கண்டாவின் ஆதரவை ஏற்றுக் கொள்வதா என்று பாஜக மீது காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரஞ்சித் சுர்ஜேவாலா இது தொடர்பாக கூறும்போது, “தற்கொலை வழக்கில் கோபால் கண்டா ராஜினாமா செய்யவைக்கப்பட்ட போது பிரதமர் நரேந்திர மோடியும் அமித்ஷாவும் என்ன கூறினார்கள் என்பதை தயவு கூர்ந்து பாருங்கள்.
இது அதிகாரத்துக்காக அவர்கள் அலையும் மனப்போக்கைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது. ஹரியாணா மக்கள் பாஜக ஆட்சியை ஏற்கவில்லை. மனோகர்லால் கட்டார் மற்றும் இன்னொரு அமைச்சர் தவிர அனைத்து அமைச்சர்களும் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளனர்.
கண்டா அமைச்சராக இருந்த போது முதல்வர் ஹூடா தலைமை காங்கிரஸ் அரசு கண்டா மீது தற்கொலைக்கு பெண்ணை தூண்டிய வழக்கு குறித்த விசாரணையை மேற்கொண்டது.” என்றார்.
ஆகஸ்ட் 2012-ல் இப்போது மூடப்பட்ட எம்.டி.எல்.ஆர் விமான நிறுவனத்தில் பணியாற்றிய இளம் பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பானது, அவர் தனது தற்கொலைக் குறிப்பில் கண்டாவின் தொல்லை தாங்காமல் தற்கொலை முடிவெடுத்ததாகக் குறிப்பிட்டார். இதனையடுத்து அவர் மீது மாநில அரசு வழக்குத் தொடர்ந்து அவரை கைது செய்தது.
இந்நிலையில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதிய திறந்த மடலில், “அமித் ஷா அவர்களே, கோபால் கண்டா போன்ற கிரிமினலுடன் நீங்கள் கைகோர்ப்பது பெண்கள் பாதுகாப்பு குறித்த பாஜகவின் கடப்பாடு குறித்த கேள்விகளையும், அறக் கேள்விகளையும் எழுப்பி வருகிறது. இன்றைய தினத்தில் நாட்டின் பெண்கள் உங்களுக்கு எது முக்கியம்? அதிகாரமா? பெண்கள் பாதுகாப்பா என்பதை கவனித்து வருகின்றனர்” என்று தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.